உத்தரப்பிரதேசத்தில் கூகுள் மேப் வழிகாட்டுதலை பின்பற்றி காரில் பயணித்த மூன்று பேர், கட்டிமுடிக்கப்படாத பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபருகாபாத்தைச் சேர்ந்த விவேக் மற்றும் அமித் உட்பட மூன்று பேர் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக, குருகிராமில் இருந்து பதாவுன் மாவட்டத்தில் உள்ள பரேலிக்கு காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்ல வழி தெரியாததால் கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, ஃபரித்பூர் என்னும் இடத்தில் செல்லும்போது கூகுள் மேப் மேம்பாலம் ஒன்றில் ஏறி செல்லும்படி வழியை காட்டியுள்ளது.
அது சரியான வழி என நம்பிச் சென்ற மூவரும் அந்த பாலத்தில் சென்றுள்ளனர். ஆனால், அது கட்டி முடிக்கப்படாத பாலம் என்பதை அறியாத அவர்கள் தொடர்ந்து அப்பாலத்தில் பயணிக்கவே, பாலத்தில் இருந்து 50 அடி ஆழத்தில் இருந்த ராமகங்கா ஆற்றில் காரோடு விழுந்துள்ளனர். இதனால், சுக்கு நூறாக கார் நொறுங்கவே, பயங்கர சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்த கிராம மக்கள் காரை ஆற்றில் இருந்து வெளியே எடுத்துள்ளனர். ஆனால், அதற்குள் காரில் இருந்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பாக காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மூவரின் உடலையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, உடல்களை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல் அதிகாரி தெரிவிக்கையில், “இன்று (நேற்று) காலை 9:30 மணியளவில், ராமகங்கை ஆற்றில், சேதமடைந்த கார் கண்டெடுக்கப்பட்டது. எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கு ஆற்றில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வேகன் ஆர் கார் ஒன்று கவிழ்ந்து கிடந்தது. அந்த காரில் இருந்தவர்கள் அமித் மற்றும் விவேக் என அடையாளம் காணப்பட்டனர். ஆனால், மூன்றாவது நபரின் அடையாளம் குறித்த எந்த விவரமும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ‘கூகுள் மேப்பை நம்பிதான் அவர்கள் காரை ஓட்டிச்சென்றதாகவும், அரசாங்கத்தின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம். சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும்’ என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.