இந்தியா

பள்ளி மாணவருக்கு மாதம் ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலை: கூகுள் நிறுவனம் மறுப்பு

பள்ளி மாணவருக்கு மாதம் ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலை: கூகுள் நிறுவனம் மறுப்பு

webteam

பஞ்சாப்பை சேர்ந்த ஹர்ஷித் ஷர்மா கூகுள் நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்டதாக வந்த செய்தி போலியானது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் ஹர்ஷித் ஷர்மா என்ற மாணவர், கூகுள் நிறுவனத்தில் கிராஃபிக் டிசைனிங் பணிக்கு தேர்வு செய்யப்படுவதாக இணையதளம் மூலம் அறிந்ததாகவும், அதன்பின் ஆன்லைன் மூலம் நேர்காணலில் பங்கேற்ற ஷர்மா, பள்ளியில் படிக்கும்போதே மாதம் ரூ.4 லட்சம் உதவித் தொகையுடன் கடந்த ஓராண்டாக கூகுள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து பயிற்சியின் முடிவில் ஹர்ஷித் ஷர்மாவுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.1.44 கோடி நிணயிக்கப்பட்டு பணி நியமன ஆணையை கூகுள் கடந்த ஜூன் மாதத்தில் அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த செய்திக்கு கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் இது போன்று யாரையும் பணிக்கு தேர்வு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஹர்ஷித் ஷர்மா கூகுள் நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்டதாக செய்தி வெளியானதும் அவர் பள்ளி அவருக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில் பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்டபோது, பணி நியமனக் கடிதத்தினைத் தாங்கள் பார்க்கவில்லை என்றும், செய்திகள் வெளிவந்ததன் காரணமாக நாங்கள் அறிக்கை வெளியிட்டோம் என்றும் பள்ளி முதல்வர் இந்திரா பெனிவல் கூறியுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் ரூபின்ஜித் சிங் பிரார் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.