இந்தியா

கொரோனாவை வென்ற 94 வயது முதியவர் !

கொரோனாவை வென்ற 94 வயது முதியவர் !

jagadeesh

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 94 வயது முதியவர் வெற்றிகரமாகச் சிகிச்சை முடித்து வீடு திரும்பியிருப்பது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 5 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நாட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கம் மாநிலத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏறக்குறைய 600 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். அம்மாநிலத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க மேற்கு வங்கம் மாநிலம் மட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நம்பிக்கையளிக்கும் செய்தி கொல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறது. அது லால் மோகன் சேத் என்கிற 94 வயதுடைய முதியவர் கொரோனா பாதிப்பின் காரணமாக ஜூன் 9 ஆம் தேதி கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இப்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்தச் செய்தி மேற்கு வங்கம் மாநிலம் மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் இந்திரானில் பிஸ்வாஸ் கூறும்போது "சுவாச பிரச்னையுடன் முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. வெண்ட்டிலேட்டரின் உதவி அவருக்குத் தேவைப்படவில்லை. அவருக்கு ஏற்கெனவே ரத்த அழுத்தம் இருந்தது. அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிறிது நாள்களில் அவர் ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் சுவாசிக்க ஆரம்பித்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிலிருந்து மீண்ட அவருக்கு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் பரிசுகளை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.