gold ANI
இந்தியா

தீபாவளிக்குப் பிறகு தலைகீழாக மாறிய தங்கம் விலை.. இரண்டு நாட்களில் அதிரடி சரிவு.. இன்னும் குறையுமா?

தீபாவளிக்குப் பிறகு சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தங்கம் விலை இன்று சரிந்துள்ளது.

Prakash J

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலரின் மதிப்பு, பணவீக்கம் மற்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் கொள்கைகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்த நிலையில், கடந்த சில வாரங்களாகச் சரிவையும் சந்தித்தது. தொடர்ந்து ஏற்றம் கண்டது. இப்படியான சூழ்நிலையில், தீபாவளிக்குப் பிறகு சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து ரூ. 1,04,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold

சென்னையில் ஆபரணத் தங்கம் கடந்த இரண்டு நாட்களில் 1,920 ரூபாய் சரிந்துள்ளது. அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, டாலரின் மதிப்பு வலுவடைந்துள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்து டாலரில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும், அமெரிக்காவில் பத்திரங்களின் மீதான வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால், லாபமில்லாத தங்கத்தின் மீதான முதலீட்டு மோகம் குறைந்துள்ளது. தவிர, தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் முடிவடைந்ததால், உள்நாட்டிலும் தங்கத்திற்கான தேவை சற்று தணிந்துள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தில் சற்று சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 5,000 குறைந்து ரூ.2,00,000-க்கு விற்பனையாகிறது. இந்த விலை வீழ்ச்சி இன்னும் சில நாட்களுக்குத் தொடருமா அல்லது மீண்டும் உயரத் தொடங்குமா என்பதை சர்வதேச சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகளே தீர்மானிக்கும்.