செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
உலக தங்கச் சந்தையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுகள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வட்டி உயர்வு, டாலர் மதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சர்வதேச தங்க விலையில் பிரதிபலிக்கின்றன. சர்வதேச சந்தையை சார்ந்துள்ள இந்திய தங்கச் சந்தையும் இதற்கு விதிவிலக்கல்ல. எனவே, அமெரிக்காவின் பொருளாதார முடிவுகள் இந்தியாவில் தங்கம் விலையையும் பாதிக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் அடுத்த கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் தற்போதைய நிலையிலேயே தொடரலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை, நேற்று சுமார் 2% உயர்ந்தது.
இதற்கிடையே, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் வாலர் (Christopher Waller), பணவீக்க அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதை வரவிருக்கும் தரவுகள் உறுதி செய்தால், அடுத்த கொள்கைக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருப்பதற்கு ஆதரவாக அவர் வாதிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, செப்டம்பர் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஃபெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டி உயர்த்தப்படுவதற்கான எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. வாலரின் கருத்துக்கு முன்பு சுமார் 62% ஆக இருந்த வட்டி உயர்வுக்கான வாய்ப்பு, தற்போது 54% ஆகக் குறைந்துள்ளதாக உலக வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.
வட்டி விகிதம் தொடர்பான எதிர்பார்ப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளதாக ஸ்டோன்எக்ஸ் நிறுவனத்தின் மூத்த சந்தை நிபுணர் பாப் ஹேபர்கார்ன் தெரிவித்துள்ளார். ஃபெடரல் ரிசர்வ் இனி வட்டி உயர்வில் அதிக தீவிரம் காட்டாது என முதலீட்டாளர்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் குறைந்ததும், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தன. வட்டி வருவாய் அளிக்காத தங்கத்தை வைத்திருப்பதற்கான வாய்ப்பு குறைந்ததால், தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வமும் அதிகரித்தது.
இதனிடையே, அமெரிக்க வேலைவாய்ப்பு குறித்த முக்கிய புள்ளிவிவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன. அது மட்டுமல்லாமல் பணவீக்கம் தொடர்பான Consumer Price Index மற்றும் Producer Price Index தரவுகளும் அடுத்த வாரம் வெளியிடப்பட இருக்கின்றன.
இதை எல்லாம் ஒருசேர பார்க்கும்போது, தற்போதைய சூழல் Gold market-க்கு சாதகமாகவே உள்ளதாகவே கூறப்படுகிறது. வட்டி உயர்வு குறித்த எதிர்பார்ப்பு குறைந்திருப்பது, டாலர் மற்றும் பத்திர வருவாய் சரிவு ஆகியவை தங்கம் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்பை உருவாக்குகின்றன. எனினும், வெளியாகவிருக்கும் அமெரிக்க வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்க தரவுகளே தங்கத்தின் அடுத்தகட்ட விலை நகர்வை தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக இருக்கும் என சர்வதேச சந்தை வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.