இந்தியா

நெல்வயலில் தொலைந்துபோன தங்க காதணி... 20 ஆண்டுகளுக்குப் பின் கண்டெடுக்கப்பட்ட அதிசயம்

நெல்வயலில் தொலைந்துபோன தங்க காதணி... 20 ஆண்டுகளுக்குப் பின் கண்டெடுக்கப்பட்ட அதிசயம்

Sinekadhara

கேரளாவில் எம்.ஜி.என்.ஆர்.ஜி.ஏ தொழிலாளர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் நெல்வயலில் தொலைத்த ஒரு பெண்ணின் தங்க காதணியை மீண்டும் அதே இடத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

கேரளாவின் காசார்கோடு மாவட்டத்தில் நாராயணி என்ற வயதான பெண்மணி ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு நெல் வயலில் தன்னுடைய தங்க காதணியை தொலைத்துவிட்டார். பலமுறை தேடியும் அந்த காதணியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மகாத்மா காந்தி தேசிய உறுதி சட்டத்தின்கீழ்(எம்.ஜி.என்.ஆர்.ஜி.ஏ) பணிபுரியும் பெண்கள் குழு, ’சுபிக்‌ஷ கேரளம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக காசார்கோடு மாவட்டத்தின் பெடட்கா பஞ்சாயத்திலுள்ள எடம்பூரடியில் வயல்வேலையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வயலை உழுதபோது பேபி என்ற பெண் இந்த காதணியைக் கண்டுபிடித்துள்ளார். சேறால் மூடப்பட்டிருந்த அந்த காதணி தங்கம் என்பதைக் கண்டுபிடித்தார். அவர்களுடன் வேலை செய்தவர்களில் நாராயணியின் மகள் மாலினியும் ஒருவர். அவர் அதைப் பார்த்தவுடனே தனது தாயார் தொலைத்த காதணி என்பதை கண்டுகொண்டார்.

தொலைந்த சமயத்தில் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து பல வாரங்களாக அதைத் தேடியிருந்ததால், அவர்களும் அதை உறுதி செய்தனர். 60-70 வருடங்களுக்கு முன்பு நாராயணி அந்த காதணியை 24 கிலோகிராம் அரிசிக்கு வாங்கியிருக்கிறார்.

குழுவைச் சேர்ந்த பெண்கள் காதணியைக் கழுவி நாராயணியிடம் கொடுத்துள்ளனர். 2000ஆம் ஆண்டில் அதைத் தொலைத்தபோது அதன் மதிப்பு ரூ.4,400. இப்போது அதன் மதிப்பு ரூ.40,000.