கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எக்ஸ் தளம்
இந்தியா

CJP| கரப்பான்பூச்சி பெயரில் உருவான புதிய கட்சி.. 2 நாளில் 40,000 பேர்.. சேரும் TMC தலைவர்கள்!

இந்த சூழலில்தான் விளையாட்டாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' உருவாக்கப்பட்டு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Prakash J

இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற புதிய அரசியல் கட்சி உருவாகியுள்ளது. இக்கட்சியானது, ஆட்சியின் மீது விரக்தியடைந்த மக்களுக்கான ஒரு இயக்கமாகத் தன்னை முன்னிறுத்தியுள்ளது. உருவான சில தினங்களிலேயே இக்கட்சியில் 40,000 பேர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். இக்கட்சியின் எக்ஸ் பக்கத்தை 15,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) என்ற புதிய அரசியல் கட்சி உருவாகியுள்ளது. 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் வேலை செய்த அபிஜித் தீப்கே என்பவர் இந்தக் கட்சியை தொடங்கி உள்ளார். சி.ஜே.பி. கட்சியானது, ஆட்சியின் மீது விரக்தியடைந்த மக்களுக்கான ஒரு இயக்கமாகத் தன்னை முன்னிறுத்தியுள்ளது. இது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி கிடையாது என்றாலும், இளைஞர்களால் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கேளிக்கையான கட்சியாகும். ’மதச்சார்பற்ற - சோசலிச - ஜனநாயக - சோம்பேறி’ என்பதே இக்கட்சியின் கொள்கையாகும். எனினும், உருவான சில தினங்களிலேயே இக்கட்சியில் 40,000 பேர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். இக்கட்சியின் எக்ஸ் பக்கத்தை 15,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். மேலும் இக்கட்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களாக மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் உள்ளிட்டோர் தங்களை இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வழக்கறிஞர் ஒருவர் சீனியர் அட்வகேட் அந்தஸ்து கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், " சில வேலையற்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கரப்பான் பூச்சிகளை போலவும், ஓட்டுண்ணிகளைப் போலவும் உள்ளனர். சமூக ஊடகச் செயல்பாட்டாளர்களாக மாறி அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இங்கு பலரின் சட்டத்துறை பட்டங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்" என்று பேசியிருந்தார்.

மனுதாக்கல் செய்திருந்த வழக்கறிஞர் தனக்கு சீனியர் அட்வகேட் அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அழுத்தம் தருவதுமாக இருந்துள்ளார். ஆனால் நாட்டில் உள்ள வேலையில்லா இளைஞர்களை ஒட்டுமொத்தமாக சூர்யகாந்த் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. எனினும், இதற்கு நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில்தான் விளையாட்டாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' உருவாக்கப்பட்டு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், இக்கட்சி, தனது முதல் மெய்நிகர் GenZ மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. தவிர, நீட் மற்றும் சிபிஎஸ்இ போன்ற தேர்வு மோசடிகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் ஆதரவாக நிற்பதாகவும் அறிவித்துள்ளது. எனினும், இக்கட்சி பதிவு செய்யப்பட்டு உரிய அங்கீகாரத்தைப் பெறுமா அல்லது வெறும் மீம்களை வைத்து நடத்தப்படும் ஒரு அரசியல் பரிசோதனையா எனத் தெரியவில்லை.