goa club x page/𝑼𝒏𝒄𝒆𝒏𝒔𝒐𝒓𝒆𝒅 𝑴𝒆
இந்தியா

கோவா | இரவு விடுதி தீ விபத்து.. அரசாங்க நிலம் ஆக்கிரமிப்பு? விசாரணையில் வெளியான தகவல்!

கோவாவின் கேளிக்கை விடுதி ஒன்றில் கடந்த 7ஆம் தேதி இரவு நிகழ்ந்த தீ விபத்து சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Prakash J

கோவாவின் கேளிக்கை விடுதி ஒன்றில் கடந்த 7ஆம் தேதி இரவு நிகழ்ந்த தீவிபத்து சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கோவாவின் மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றாக, பாகாவின் அர்போரா கிராம் உள்ளது. மாநில தலைநகர் பனாஜியிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் ஏராளமான கேளிக்கை இரவு விடுதிகள் உள்ளன. அந்த வகையில், ’பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற பெயரில் கேளிக்கை இரவு விடுதி ஒன்று கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. அந்த விடுதியில், கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 25 பேர் பலியாகினர். ஆறு பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளியேறும் பகுதி மிகக்குறுகலாக இருந்ததே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கோவா முதல்வர் பிரசாந்த் சாவத், ”இதற்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

goa fire

இந்த உயிரிழப்புச் சம்பவம் பஞ்சாபில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பான விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது, இந்த கேளிக்கை விடுதிக்கு உரிமையாளர்களாக லூத்ரா சகோதரர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு பல இடங்களில் கேளிக்கை விடுதிகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. தவிர, இதே கோவாவில் அவர்களுக்கு இன்னொரு கேளிக்கை விடுதி இருப்பதாகவும், அது அரசாங்க நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது, கோவாவின் வாகேட்டர் கடற்கரையை ஒட்டிய மலைப் பகுதியில் அமைந்துள்ளது என விசாரணைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுதொடர்பாக காவல்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கடலோர மண்டல ஒழுங்குமுறை வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் புகார்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

அதேநேரத்தில் இதுதொடர்பாக புகார் அளித்த சமூக ஆர்வலர் மீது அந்த உரிமையாளர்கள் கொலை மிரட்டல்கள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இறுதியில், அந்தச் சமூக ஆர்வலர் பம்பாய் மற்றும் கோவா நீதிமன்றங்களை அணுகியுள்ளார். அதனடிப்படையில் அந்த கிளப்பை இடிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. ஆனால், அதை மேலோட்டமாகச் செய்துவிட்டு மீண்டும் கிளப் இயங்கியுள்ளது. தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சுற்றுலாத் துறையும் இடிப்பு உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனாலும் கிளப் இயங்கி வந்துள்ளது.

goa club

இந்த நிலையில் 25 பேரைப் பலிகொண்ட விபத்துக்குப் பிறகு மாநில அரசு கிளப்கள் தொடர்பாக தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, தீ விபத்து சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே சகோதரர்கள் கோவா மற்றும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்துக்கு இரையான பிர்ச் பை கிளப்தான் அவர்களின் மிகப்பெரிய லாபம் கொழிக்கும் நிறுவனமாகச் செயல்பட்டு வந்ததாகவும் அவர்கள் விரைவில் நொய்டாவில் ஒரு கிளப்பை தொடங்க இருந்ததாகவும் துபாயில் ஒரு குடியிருப்பு சொத்து வைத்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.