இந்தியா

பாஜக அமைச்சரை கேள்வி கேட்டவர் கைது!

பாஜக அமைச்சரை கேள்வி கேட்டவர் கைது!

webteam

கோவாவில் வேலைவாய்ப்பின்மை குறித்து பாஜக அமைச்சரிடம் கேள்வி கேட்டதற்காக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 5 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவாவில் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால்  அங்கு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில் வடக்கு கோவாவில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் விஷ்வஜித் ரானே பங்கேற்ற பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சருடன் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினர். கூட்டத்தின் போது அமைச்சரிடம் தர்ஷன் கோன்கர் என்பவர் சில கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக 'முன்பு கூறியதை  போல இதுவரை வேலைவாய்ப்பு வழங்கவில்லையே'? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டம் முடிந்தவுடன் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து பேசிய தர்ஷன் கோன்கர், ''நான் வேலைவாய்ப்பின்மை குறித்து கேள்வி மட்டுமே கேட்டேன். ஆனால் கூட்டம் முடிந்தவுடன் நான் கைது செய்யப்பட்டேன்'' என்று தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட தர்ஷன் பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் விஷ்வஜித் ரானே கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவா மாநில காங்கிரஸ், ''ஆளும் அரசு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தனக்காக வேலைபார்க்க வைத்தால் இப்படித்தான் நடக்கும். இது கண்டனத்துக்குரியது'' என்று தெரிவித்துள்ளது.