இந்தியா

ஐஐடியில் படித்த முதல் முதலமைச்சர்... மனோகர் பாரிக்கர் வாழ்க்கை வரலாறு..!

webteam

கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (63) கணையப் புற்று நோயால் சில மாதங்களாக அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மனோகர் பாரிக்கர் கடந்துவந்த பாதையை தெரிந்து கொள்வோம்.

மனோகர் பாரிக்கர் 1955-ஆம் ஆண்டு கோவாவின் மபுசா நகரில் பிறந்தவர். இவரது இளமை பருவத்தில், அதாவது 1970-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்தார். அதன்பிறகு ஐஐடி பாம்பேவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். பட்டப்படிப்பு முடித்த பின்பு மறுபடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக பணியாற்றினார். அப்போது அவரின் வழிகாட்டியாக இருந்தவர் சுபாஷ் வெலிங்கர். மனோகர் பாரிக்கர் தான் கோவாவின் பாஜக வருங்கால முகமாக இருப்பார் என்று அப்போதே வெலிங்கர் கணித்திருந்தார்.

அவர் கூறிய மாதிரியே மனோகர் பாரிக்கர் 26 வயதில் பாஜகவில் இணைந்தார். அதன்பின்னர் 1994-ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் நான்கு பேர் வென்றனர். அதில் மனோகர் பாரிக்கரும் ஒருவர். இதனையடுத்து கோவா மாநிலத்தில் பாஜகவின் முக்கிய தலைவராக திகழ்ந்தார் பாரிக்கர். 1999-ஆம் ஆண்டு கோவா சட்டப் பேரவையின் எதிர்கட்சி தலைவராக பாரிக்கர் பதவி வகித்தார். அதன்பிறகு 2000-ஆம் ஆண்டு முதல் முறையாக கோவா முதலமைச்சராக பாரிக்கர் பதவியேற்றார். இந்தியாவின் முன்னனி தொழிநுட்ப நிறுவனமான ஐஐடியில் படித்த, முதல் முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் பாரிக்கர்.

அதன்பிறகு பாஜக கட்சிக்கு கோவா முன்னுதாரணமாக திகழும் வகையில் செயல்பட்டார். அங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்தையும் பாஜகவிற்கு ஆதரவு தரும் வகையில் பாரிக்கர் செயல்பட்டார். 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க பாரிக்கர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்றார். பாதுகாப்புத் துறையில் அவர் அமைச்சராக இருந்தபோது தான் இந்தியா ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்தியது. அப்போது பாரிக்கர் பெறும் பங்காற்றியதாக இராணுவ வடக்கு பிராந்திய தளபதி கூறியிருந்தார். பின்னர் 2017-ஆம் ஆண்டு பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகி கோவா மாநில முதல்வராக பதவியேற்றார். 

கடந்த 2018-ஆண்டு முதல் கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். அத்துடன் டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலும் பாரிக்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு கோவா மாநிலத்தில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவந்த பாரிக்கர் இன்று இரவு 8 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.