இந்தியா

எதிர்காலத்தில் ஜம்மு காஷ்மீரில் கடும் தண்ணீர் பஞ்சம்? உருகும் பனிப்பாறைகளால் ஆபத்து?

webteam

காஷ்மீர் பகுதியில் பனிப்பாறைகள் அதிவேகமாக உருகி வருவதால், கடந்த அறுபது ஆண்டுகளில் 23 சதவீத பகுதிகளை இழந்துள்ளதாகவும், எதிர்வரும் ஆண்டுகளில் கடும் தண்ணீர் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் ஏற்படும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக உணவு உற்பத்தி குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் இமாலயப் பகுதிகளில்தான் அதிக அளவில் பனிப்பாறைகள் உள்ளன. தற்போது ஏற்பட்டுவரும் மிகப்பெரும் பருவநிலை மாற்றங்கள் காரணமாக வேகமாக பனிப்பாறைகள் உருகத் தொடங்கியுள்ளன.

இதுதொடர்பான ஆய்வு ஒன்றை காஷ்மீர் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அதில் ஒவ்வொரு ஆண்டும் 35 செ.மீ. அளவுக்கு பனிப்பாறைகளின் அடர்த்தி குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் இயற்கை தொடர்பான ஆய்விதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் துறை பேராசிரியர் ஷகீல் ரோம்ஷூ தலைமையில் ஆய்வுக்குழுவினர் 12,243 பனிப்பாறைகளில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.