2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் போடோலாந்தை தனி மாநிலமாக பிரிக்காவிட்டால் போடோ இனமக்கள் பாஜகவை தேர்தலில் நிராகரிப்போம் என போடோ அமைப்புகள் எச்சரித்துள்ளன.
அசாமில் உள்ள முக்கிய பிரச்னைகளுள் ஒன்றாக போடோலாந்து தனி மாநில கோரிக்கை உள்ளது. நீண்ட வருடங்களாக அங்கிருக்கும் போடோ இன மக்கள் தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2012ஆம் ஆண்டு வங்கதேசக் குடியேறிகளுக்கும், போடோ இன மக்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் சுமார் 75க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து போடோ இன மக்களின் போடோலாந்து தனிமாநில கோரிக்கை என்பது வலுப்பெற்றது. அந்த கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பது என அந்த மக்கள் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் 2016ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, போடோ தனிமாநிலமாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து பாஜக தேர்தலை சந்தித்தது. மேலும் அசாமில் உள்ள வங்கதேசக் குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். வங்கதேசக் குடியேறிகள் அனைவரும் முஸ்லீம்கள் என்பதால், மோடி இவ்வாறு கூறுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
அசோம் கானா பரிஷுத் என்ற கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பாஜக, வெற்றியும் பெற்றது. ஆனால் இதுவரை தனிமாநிலமாக பிரிக்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 2019ஆம் ஏப்ரல் மாதத்திற்குள் போடோலாந்தை தனிமாநிலமாக பிரிக்க வேண்டும் என போடோ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. போடோ அமைப்புகளை ஒருங்கிணைக்கும் அமைப்பாக, போடோ அனைத்து மாணவர்கள் சங்கம் உள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் ப்ரமோத் போடோ கூறுகையில், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் வரை நாங்கள் பாஜகவிற்கு நேரம் அளித்துள்ளோம். அதற்குள் தனிமாநிலமாக போடோலாந்து பிரிக்கப்படாவிட்டால், பாஜக தேர்தலில் போடோ இன மக்கள் வாக்குகளை இழக்கும் என்று எச்சரித்துள்ளார். அசாமில் உள்ள மக்கள் தொகையில் 12% பேர் போடோ இனத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.