ஒடிசா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு ஆசிரியர் பாலியல் வன்கொடுமை அளித்ததாக புகார் அளித்திருந்த நிலையில் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தனது சகோதரியின் மரணத்திற்கு நீதி கிடைக்க எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் செல்வேன் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் ஆசிரியர் பாலியல் தொல்லையளித்ததாக மாணவி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில், மாணவிக்கு சமீர்குமார் சாஹு என்ற ஆசிரியர் (HoD) ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
ஆசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை முதல் தேதியில் மாணவி புகார் அளித்துள்ளார். தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் ஆசிரியர் மீது மாணவி புகாரளித்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் மறுத்துள்ளார்.
ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளிக்க முயன்றார்.
அவரை தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், தடுக்க முயற்சித்தவர்களின் மீதும் தீப்பற்றியுள்ளது. இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, 95 சதவீத தீக்காயங்களுடன் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது நிலை "மிகவும் கவலைக்கிடமாக" இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஒடிசா காவல்துறையின் குற்றப்பிரிவின், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளது .
மேலும், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சி தருவதாகவும் இவ்விவகாரத்தில் ஆளுநர் உடனே தலையிட்டு விரைந்து நீதி கிடைக்க உதவ வேண்டும் என்றும் எதிர்க்கட்சித்தலைவரும் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
தீக்குளித்த மாணவி 95% காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார். தீயில் துடித்த மாணவியைக் காப்பாற்ற முயன்ற மாணவர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியர் கைதான நிலையில் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணையமும் இது குறித்து மாநில அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.