இந்தியா

வரும் 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி தான்.. - குலாம் நபி ஆசாத்

வரும் 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி தான்.. - குலாம் நபி ஆசாத்

JustinDurai

கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி இருக்கையில்தான் அமரும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி நீடிப்பார் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கட்சிக்கு முழுநேர தலைமை கோரிய தலைவர்களுக்கு இந்த முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ‘அதிருப்தி’ கடிதத்தில் கையொப்பமிட்ட 24 மூத்த தலைவர்களில் குலாம் நபி ஆசாத், தோ்தல் மூலம்தான் கட்சித் தலைமையைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிந்திருந்தார். இதுதொடர்பாக ஏ,என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:   

எனது கட்சி அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியில் இருக்க விரும்பினால், கட்சிக்குள் தேர்தல் தேவையில்லை. காங்கிரஸை சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் மாற்றுவதே ஒரே நோக்கம்

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி செயல்பாடுகளில் உண்மையான அக்கறை உள்ளவர்கள், காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முன்மொழிவை வரவேற்பார்கள். காங்கிரஸ்  கட்சியை வலுவானதாகவும், செயல் திறனுடையதாகவும், மாற்றவே காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு தேர்தல் நடத்தி, அதன் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நிர்ணயித்தால் என்ன தீங்கு நேர்ந்து விடும்?

தேர்தல் மூலம்தான் கட்சிக்கான நிரந்தர தலைவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். தோ்தலில் போட்டியிட்டு தோ்வாகும் போதுதான், குறைந்தபட்சம் 51 சதவீத கட்சியினராவது உங்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆனால், நியமிக்கப்படும் தலைவருக்கு ஒரு சதவீத ஆதரவு கூட கிடைக்காது. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் தோ்தல் வழியாக நியமனம் செய்யப்பட்டால், அவா்களை பதவியிலிருந்து எளிதாக நீக்க முடியாது. எனவே, தோ்தல் மூலம் தேர்ந்தெடுப்பதில் என்ன சிக்கல் உள்ளது?

கட்சியின் அகில இந்திய தலைவா், மாவட்ட தலைவா்கள், மண்டல தலைவா்கள், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் என அனைவரும் தோ்தல் மூலமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதைத்தான் கடிதத்தில் வலியுறுத்தினோம்.

இப்போது எங்களை எதிர்ப்பவர்கள், கட்சித் தோ்தல் நடைபெற்றால் காணாமல் போய்விடுவார்கள் என்று அவா்களுக்கே தெரியும். காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தவர்கள் நாங்கள் எழுதிய கடிதத்தை வரவேற்பார்கள்’’ என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.