உத்தரபிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து, அந்தக் கொலையை வாட்ஸ்அப்பில் வெளிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் வசிப்பவர் சுமித் குமார்(34). இவருக்கு ஆசு பாலா என்ற மனைவியும் 4வயதில் இரட்டை குழந்தையும், ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திராபுரத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். குமாரின் மனைவி ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கணினி மேன்பொருள் துறையில் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பர் மாதம் அவர் இந்த வேலையை விட்டுள்ளார். இதனையடுத்து குடும்பம் அதிக நிதி நெருக்கடியில் இருந்துள்ளது.
இந்நிலையில் அவர் தனது மனைவி மற்றும் தனது மூன்று குழந்தைகளையும் வீட்டிலேயே கொலை செய்துள்ளார். அதன்பின்னர் எதற்காக இந்தக் கொலை செய்தார் என்பது குறித்து தனது வாட்ஸ்அப் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது குடும்ப நபர்கள் உள்ள குரூப்பில் பதிவிட்டு தப்பி ஓடியுள்ளார். அந்த வீடியோ பதிவில் சுமித் குமார், “தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு குளிர் பானத்தில் தூக்க மருந்தை கலந்து கொடுத்து பின்னர் அவர்களை கூர்மையான பொருட்களின் மூலம் கொலை செய்தேன்” என ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து சுமித்தின் உறவினர் பங்கஜ் சிங் கூறுகையில், “கடந்த சில மாதங்களாகவே சுமித் குடும்பம் நிதி பற்றாக்குறையில் இருந்து வந்தனர். டிசம்பர் மாதம் சுமித் தனது வேலையை விட்டுள்ளார். ஆனால் அதுகுறித்து அவர் குடும்பத்தில் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அத்துடன் சில நாட்களாக அவரது நடத்தையும் சரியில்லை. அவர் மதுவிற்கு அடிமையாகியுள்ளார்” எனத் தெரிவித்தார்.