இந்தியா

”இந்திய ஜனநாயகத்தை குறி வைக்கிறார்”.. ஜார்ஜ் சோரோஸ் சொன்னதும்.. பாஜகவின் கண்டனமும்

PT

அமெரிக்க நாட்டின் கோடீஸ்வரரான ஜார்ஜ் சோரோஸ் இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த சதி செய்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஜெர்மனி முனிச் நகரில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற 92 வயதான சர்வதேச முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ், பிரதமர் நரேந்திர மோடியை அதானி குழுமத்துடன் சம்பந்தப்படுத்தி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதானி பங்கு விற்பனை வெற்றி பெறவில்லை எனவும், அதானியின் சரிவு பிரதமர் நரேந்திர மோடியை பலவீனப்படுத்தி இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படுத்தும் எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமப் பங்குகள் சரிந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும், சோரோஸ் தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றம் மற்றும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டார். ஏற்கனவே எதிர்க்கட்சிகள் அதானி குழுமத்துடன் பிரதமர் மோடி நெருக்கமாக இருக்கிறார் என குற்றம் சாட்டி வரும் நிலையில், சோரோஸ் பேச்சு புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதையடுத்து ஜார்ஜ் சோரோஸ், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

அமெரிக்க செல்வந்தர் சோரோஸ் தனது விருப்பப்படி இந்தியா செயல்பட வேண்டும் என ஆதிக்க மனப்பான்மையை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலடி கொடுத்துள்ளார். புதுடெல்லி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அமெரிக்க செல்வந்தர் சோரோஸ் தனக்கு இணக்கமாக செயல்பட கூடியவர்களை இந்தியாவில் ஆட்சியில் அமர்த்த விரும்புகிறார் என குற்றம் சாட்டினார்.

சோரோஸ் குடும்பத்துக்கு நெருக்கமான பல்வேறு அமைப்புகள் மூலம் இந்தியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது என பாஜக குற்றம் சாட்டி வருகிறது. ஹங்கேரி நாட்டில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஜார்ஜ் சோரோஸ் தற்போதைய மதிப்புப்படி எட்டு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்துக்களை கொண்டவர்.

தனது சொத்துகளில் பெரும் பகுதியை அவர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ள நிலையில், அவர் இந்தியாவில் தேசியவாதம் வளர்வதற்கு எதிராக கருத்துக்களை அடிக்கடி தெரிவித்து வருகிறார் என பாஜக குற்றம் சாட்டி வருகிறது. சிறுபான்மையினர் நலன்களை பாதுகாக்க வேண்டும் எனவும் மனித உரிமை மீறல்கள் நடைபெறக்கூடாது எனவும் பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அமைப்புகள் தெரிவித்து வரும் நிலையில், இந்திய நாட்டில் ஜனநாயகம் நிலவி வருகிறது எனவும் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சி செய்கின்றன எனவும் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர்.

சோரோஸ் குடும்ப அமைப்புகள் மூலம் நிதி பெறும் பல தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து தேச நலங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன எனவும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பிரிட்டன் நாட்டின் "பேங்க் ஆப் இங்கிலாந்து" நிறுவனத்தை திவாலாக்க முயன்றவர் ஜார்ஜ் சோரோஸ் என ஸ்மிருதி இராணி குற்றம் சாட்டினார். அதே போன்ற தீய நோக்கத்துடன் சோரோஸ் இந்தியாவை குறி வைப்பதாக அவர் கருத்து தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி சோரோஸ் கருத்துக்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை சோரோஸ் முடிவு செய்ய முடியாது என்பதை தங்கள் கட்சி பின்பற்றும் நேருவின் வழிகாட்டல்கள் உணர்த்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.