இந்தியா

நீரவ் மோடியின் ரூ.250 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

ச. முத்துகிருஷ்ணன்

நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான நகைகள், விலை உயர்ந்த ரத்தினங்கள், வங்கி இருப்புத் தொகை உள்ளிட்ட சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் செய்த ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் நீரவ் மோடி. இந்த வழக்கு மத்திய குற்ற புலனாய்வு பிரிவான சிபிஐயால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடன் ஒப்பந்தகளை மோசடி செய்து சேர்த்த பணத்தை வெள்ளைப் பணமாக்கியது தொடர்பான மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

தற்போது இங்கிலாந்து சி்றையில் அடைக்கப்பட்டுள்ள நீரவ் மோடி, விரைவில் நாடு கடத்தப்பட்டு விசாரணைக்காக இந்தியா அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான நகைகள், விலை உயர்ந்த ரத்தினங்கள், கற்கள், வங்கி இருப்புத் தொகை உள்ளிட்ட அசையும் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.