நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவிகிதமாகவும் வரும் நிதியாண்டில் அது 6 முதல் 6.5% வரை உயரக்கூடும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-2020-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள அம்சங்கள் நீங்கி வருவதால் வரும் நிதியாண்டில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மலிவு விலை வீடு திட்டம், மேக் இன் இந்தியா திட்டம், கார்ப்பரேட் வரிக் குறைப்பு, தொழில் நடைமுறைகள் எளிதாக்கல் போன்ற காரணங்களால் வளர்ச்சி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சர்வதேச சூழல்கள் எதிர்மறையாக அமைந்தால் வளர்ச்சி பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விளைபொருள் விலை ஏற்றத் தாழ்வால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க தனி நிதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய பாசன, கடன், காப்பீடு வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாகவே விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அண்மையில் சிறிது காலத்திற்கு மட்டுமே அது உயர்வுப் போக்கில் இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு உரிய உதவி கிடைக்காததால் உயர்க்கல்வி பெற தடையாக இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே நேரம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறி வருவதாக கூறப்பட்டுள்ளது