இந்தியா

மின்னுற்பத்தி முதல் ராணுவ தளவாடம் வரை... அசுர வளர்ச்சி கண்ட அதானி

webteam

உலக பணக்காரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறி வரும் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி தற்போது உலகின் 4-ஆவது பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார்.

உலக பணக்காரர்களின் புதிய பட்டியல் ஃபோர்ப்ஸ் நிறுவன வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் மைக்ரோசாஃப்ட் தொழிலதிபர் பில் கேட்சை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் கவுதம் அதானி 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது சொத்து மதிப்பு தற்போது 9 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு ஓராண்டில் சுமார் 2 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் 18 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பிரான்சின் பெர்னார்டு அர்னால்ட் குடும்பம் 12லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் 2ஆவது இடத்தில் உள்ளது. அமேசானின் ஜெஃப் பெசோஸ் 11 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் 3ஆவது இடத்திலும் அமெரிக்காவின் பில் கேட்ஸ் 8 லட்சத்து 32 ஆயிரம் கோடி சொத்துடன் 5ஆவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 7 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளார்.

குஜராத்தை சேர்ந்த தொழிலதிபரான அதானி, 1988 ஆம் ஆண்டு தொழில்துறையில் நுழைந்தார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின்னுற்பத்தி நிறுவனமாக திகழும் அதானி, எரிவாயு உற்பத்தி, துறைமுகங்கள், விமான நிறுவனங்கள் நிர்வாகம் உணவுப் பதப்படுத்தல், ராணுவ தளவாட தயாரிப்பு, கட்டமைப்பு என பல வகையான தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறது.

அடுத்து ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடா ஃபோன் ஐடியாவுக்கு போட்டியாக 5ஜி தொலைத் தொடர்பு சேவையிலும் அதானி கால் பதிக்க உள்ளார்.