ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் சிகிச்சைக்கு உதவுமாறு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குரல் கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களுள் காம்பீரும் ஒருவர். இவர் சமீபத்தில்தான் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். காம்பீர் பொதுவாகவே தன்னுடைய நாட்டுப்பற்றினை வெளிப்படுத்தக் கூடியவர்.
இந்நிலையில், ‘ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் சிகிச்சைக்கு உதவுங்கள்’என காம்பீர் தன்னுடைய ட்விட்டரில் ஒரு பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவில், ‘இவர்தான் பீதம்பரன். இந்திய ராணுவத்தில் 1965 மற்றும் 1971 போர்களில் பணியாற்றியுள்ளார். இவரது அடையாள அட்டை மூலம் ராணுவ வீரர் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்திய ராணுவத்தை அணுகி அவரால் உதவியை பெற முடியவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதோடு, ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய கழுத்தில் பதாகையுடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார். அந்த முதியவர் மாட்டியிருந்த பதாகையில், தான் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்றும் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கியதாகவும், தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறும் குறிப்பிட்டிருந்தார்.
ராணுவ வீரருக்கு உதவி செய்யுமாறு ட்விட்டர் மூலம் ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு காம்பீர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து, காம்பீரின் ட்விட்டர் பதிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் உனடியாக பதில் அளித்தது. “ராணுவ வீரருக்காக குரல் கொடுத்த உங்களை பாராட்டுகிறோம். அவருக்கு உரிய உதவிகள் முழுமையாக அளிக்கப்படும்” என்று பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, காம்பீர் மற்றொரு ட்விட்டர் பதிவில் பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ வீரருக்கு உதவியதை குறிப்பிட்டு இருந்தார். அந்தப் பதிவில், “ராணுவ வீரர் பீதாபரனுக்கு எப்படி உதவி செய்தோம் என்று ராணுவம் விரிவாக தெரிவித்துள்ளது. இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ராஜ்ய சைனிக் வாரியத்தில் இருந்து நிதியுதவி செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.