இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானி, பல்வேறு துறைகளிலும் தன்னுடைய வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறார். விண்வெளித் துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மேற்கொண்டு வருகிறார். இதன்மூலம், அவருடைய வர்த்தகம் உலகம் முழுதும் விரிந்து கிடக்கிறது.
இந்த நிலையில் கெளதம் அதானி, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற உலகளாவிய விண்வெளித் துறைத் தலைவர்களுக்கு சவால் விடும் இந்தியாவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள உற்பத்தி (SSLV) தயாரிப்பில் அதானி குழுமம் போட்டியிட உள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன அறிக்கையின்படி, ’இந்தியாவின் மிகச்சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வாகனத்தை (SSLV) தயாரிப்பதற்கான இறுதிப் பட்டியலில் மூன்று நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் அதானி குழுமமும் ஒன்று. மற்ற இரண்டு போட்டியாளர்கள் அரசுக்குச் சொந்தமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆகியவையாகும். அந்த வகையில் அதானி குழுமம் இதில் தேர்வு செய்யப்பட்டால், அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், அதன் துணை நிறுவனமான ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸுடன் இணைந்து, இந்தியாவில் SSLV-களின் உற்பத்தியைத் தொடங்க முடியும்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சிறிய செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பிரிவே SSLV ஆகும். இதன்மூலம், 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். சா்வதேச விண்வெளித் துறையில் சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது.
அதிக எடைகொண்ட இவ்விரு பெரிய ராக்கெட்டுகளில் செயற்கைக்கோள்களை அனுப்பும் போது செலவு அதிகமாகிறது. எனவே, அதனை குறைக்க தற்போது மினி, மைக்ரோ, நானோ என 500 கிலோ வரை உடைய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையிலான ராக்கெட்டுகளின் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்தே உலக விண்வெளிச் சந்தையில் SSLVயின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், 2023ஆம் ஆண்டில் SSLV மூலம் சிறிய ரக செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் அதன் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தை தனியாருக்கு விட முடிவு செய்தது. இந்த நடவடிக்கை நாட்டின் வணிக விண்வெளித் துறையை விரிவுபடுத்துவதையும், தற்போது SpaceX ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய செயற்கைக்கோள் ஏவுதள சந்தையில் போட்டியிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
SSLV உற்பத்தி ஒப்பந்தம், 20 நிறுவனங்களிடமிருந்து ஏலங்களை ஈர்த்தது. வெற்றி பெற்ற ஏலதாரர் SSLV-இன் உற்பத்தி செயல்முறை, வடிவமைப்பு சிக்கல்கள் மற்றும் தர உறுதிப்பாட்டு பயிற்சி ஆகியவற்றைப் பெற இஸ்ரோவிற்கு தோராயமாக ரூ.3 பில்லியன் செலுத்த வேண்டும். 24 மாத ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் இரண்டு SSLV ஏவுதல்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதும் அடங்கும். இந்த தனியார்மயமாக்கல் முயற்சி இந்தியாவின் விண்வெளித் துறைக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அதானி குழுமம் போன்ற தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம், உலகளாவிய செயற்கைக்கோள் ஏவுதள சந்தையில் வலுவான இருப்பை நிலைநாட்ட நாடு இலக்கு வைத்துள்ளது.