இந்தியா

குஜராத் சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு விருந்தளித்த கவுதம் அதானி!

ச. முத்துகிருஷ்ணன்

இரண்டு நாள் இந்திய பயணமாக இன்று அதிகாலை குஜராத் வந்தடைந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தொழிலதிபர் கவுதம் அதானி விருந்தளித்தார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரண்டு நாள் இந்திய பயணமாக இன்று அதிகாலை குஜராத் வந்தடைந்தார். இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமான குஜராத்தில் இங்கிலாந்து பிரதமர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை. அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு, அதன்பின் அவர் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்றார். அடுத்ததாக தொழிலதிபர் கவுதம் அதானியை சந்தித்தார். இருவரும் ஆற்றல் மாற்றம், காலநிலை நடவடிக்கை, விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற முக்கிய துறைகள் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

“குஜராத்திற்கு வருகை தந்த முதல் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு விருந்தளிப்பதில் பெருமையடைகிறேன். புதுப்பிக்கத்தக்க, பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதிய எரிசக்தியை மையமாகக் கொண்டு காலநிலை மற்றும் நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்கள் உருவாக்கத்தில் பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவேன். " என்று அதானி போரிஸ் உடனான சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார்.

இந்தியா தனது ஆயுதப் படைகளை நவீனப்படுத்த 2030 ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ள நிலையில், அதானி மற்றும் ஜான்சன் இடையேயான சந்திப்பில் பாதுகாப்புத் துறை முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக அதானி குழுமம் மற்றும் பிரிட்டிஷ் நிறுவனங்கள் இணைந்து விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை எவ்வாறு வடிவமைக்கலாம் மற்றும் மேம்படுத்தலாம் என்பது பற்றி விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.