கெளரி லங்கேஷ், ஸ்ரீகாந்த் பங்கர்கர் எக்ஸ் தளம்
இந்தியா

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது.. தேர்தலில் சுயேட்சையாய் வெற்றி.. யார் இந்த ஸ்ரீகாந்த் பங்கர்கர்?

மகாராஷ்டிராவில், 2017 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர், ஜல்னா நகராட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றிருப்பது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில், 2017 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர், ஜல்னா நகராட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றிருப்பது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

மகாராஷ்டிராவில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று (ஜனவரி 15) நடைபெற்ற நிலையில், இன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் பங்கர்கர், ஜல்னா நகராட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றிருப்பது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அவர், பாஜக மற்றும் பிற கட்சிகளின் வேட்பாளர்களை தோற்கடித்து, 2,621 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அந்த வார்டில் வேட்பாளரை நிறுத்தாதும், சுயேச்சைகள் மற்றும் போட்டி கட்சிகளின் வேட்பாளர்களிடையே ஏற்பட்ட பலமுனைப் போட்டியும் பங்கர்கர் வெற்றிபெறக் காரணமாக அமைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான சிறிது நேரத்திலேயே பங்கர்கர், தனது வெற்றியைக் கொண்டாடினார்.

யார் இந்த ஸ்ரீகாந்த் பங்கர்கர்?

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஷ், செப்டம்பர் 5, 2017 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை நாடு தழுவிய சீற்றத்தையும் பதற்றத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் இந்த வழக்கில் ஸ்ரீகாந்த் பங்கர்கர் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 2024ஆ,ம் ஆண்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பங்கர்கர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். பரவலான விமர்சனங்களைத் தொடர்ந்து, ஷிண்டே தனது கட்சி சேர்க்கையை நிறுத்தி வைத்தார். அதற்கு முன்னதாக பங்கர்கர், 2001-2006க்கு இடையில் பிரிக்கப்படாத சிவசேனாவிலிருந்து ஜல்னா நகராட்சி மன்றத்தில் ஒரு மாநகராட்சி உறுப்பினராக பணியாற்றினார். 2011இல் அவருக்கு மீண்டும் சீட் மறுக்கப்பட்ட பிறகு, அவர் வலதுசாரி இந்து ஜன்ஜக்ருதி சமிதியில் சேர்ந்தார். இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால் அவர் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில், அவர் மீது வெடிபொருள் சட்டம், வெடிபொருள் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.