பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது சிவசேனா கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், சில வகையான சிந்தனைக்கு எதிரானவர்களை அடக்க கோழைத்தனமான முறை பின்பற்றப்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கவுரியின் சில கட்டுரைகள் ஒரு சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம் என்றாலும் கூட, அவரது படுகொலை மனித நேயமற்ற செயல் என்று அந்த நாளேடு விமர்சித்துள்ளது.
கவுரி லங்கேஷ் கொலை, மனித நேயத்தின் மீது மட்டுமின்றி, நாட்டின் நற்பெயர் மீதும் படிந்திருக்கும் கறை என்று சாம்னா சாடியிருக்கிறது. பெண் ஒருவர் பாதுகாப்புத்துறை அமைச்சராகியுள்ளார் என்று ஒருபுறம் கொண்டாடும் வேளையில், மறுபுறம் ஒரு பெண் பத்திரிகையாளர் கொல்லப்பட்டிருப்பது எதனை அடையாளப்படுத்துகிறது என்று சாம்னா நாளேடு கேள்வி எழுப்பியிருக்கிறது.