இந்தியா

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பேட்டி

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பேட்டி

webteam

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுராவில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டது குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருவதாகவும், வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்யும் முயற்சியில் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக ராமலிங்க ரெட்டி கூறினார்.

குற்றவாளிகள் குறித்த தகவலை ஊடகங்களுக்கு தற்போது தெரிவிக்க இயலாது. அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில் குற்றவாளிகள் தப்பிச்செல்ல அது சாதகமாக அமைந்துவிடும் என்றார். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது போதுமான ஆவணங்கள் இல்லாவிட்டால் அது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். அதனால் சரியான ஆவணங்களை காவல்துறையினர் திரட்டி வருவதாக ராமலிங்க ரெட்டி கூறினார்.

பெங்களூருவில் பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த மாதம் 5ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் இதுவரை ஒருவரை கூட காவல்துறையினர் கைது செய்யவில்லை.