சந்தீப், அனுராதா சௌத்ரி
சந்தீப், அனுராதா சௌத்ரி pt web
இந்தியா

பெண் தாதாவை மணக்க பரோலில் வந்த கேங்க்ஸ்டர்... பாதுகாப்பு படை கண்காணிப்புக்கு இடையே டும் டும் டும்!

PT WEB

டெல்லியில் 'கலா ஜாதெடி' என்று அழைக்கப்படும் கேங்க்ஸ்டர் சந்தீப்பும், 'மேடம் மின்ஸ்' என்று அழைக்கப்படும் ராஜஸ்தானின் பெண் தாதாவான அனுராதா சௌத்ரியும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

டெல்லி நீதிமன்றத்தின் அனுமதியை தொடர்ந்து, சுமார் 250-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரின் கண்காணிப்புக்கு மத்தியில் டெல்லி துவாரகாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், குறிப்பிட்ட அளவிலான உறவினர்களுக்கு, அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு கடும் சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.

திருமணத்தையொட்டி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டதுடன், ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு நடைபெற்றது. சந்தீப் மீது டெல்லியில் கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.

அதேபோல், அனுராதா சௌத்ரி மீதும் பணமோசடி, கடத்தல், மிரட்டல்கள் மற்றும் ஆயுதச் சட்டம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், ஜாமீனில் வெளியே உள்ள நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேங்ஸ்டர் சந்தீப், பரோலில் வந்து அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர்.