கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் மீது தொடர்ந்து 4-வது முறையாக ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவின் உள்ள அலிகஞ்ச் பகுதியில் உள்ளது, ’ஷெரோயஸ் ஹேங்கவுட் கேப்’ என்ற ஓட்டல். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து நடத்தும் ஓட்டல் இது. இதற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. நேற்று இரவு இந்த ஓட்டலில் இருந்து தண்ணீர் பிடிக்க ஒரு பெண் வெளியே வந்தார். அப்போது மறைந்திருந்த இரண்டு பேர் அவர் மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் அவர் முகம் மற்றும் தோள் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பெண், ரேபரேலியை சேர்ந்தவர். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இவர், கடந்த 2008-ம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர். பின்னர் 2011-ல் இவர் மீது ஆசிட் வீசப்பட்டது. 2013-ம் ஆண்டும் ஆசிட் வீச்சுக்கு ஆளானார். கடந்த மார்ச் மாதம் ஓடும் ரயிலில் அவரை ஆசிட் குடிக்க செய்தனர். இப்போது மீண்டும் அவர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா மூலம் விசாரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.