உத்தரபிரதேச மாநிலத்தில் ஓடும் காரை வழிமறித்த கும்பல் ஒன்று நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததோடு தடுக்க வந்த ஒருவரை சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா ஜேவர் என்ற இடத்திலிருந்து உறவினரைச் சந்திப்பதற்காக 4 பெண்கள் உள்பட 8 பேர் ஒரு காரில் புலந்த்சாகர் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஜேவர் பகுதியில் உள்ள சாபோடேஜ் என்ற கிராமம் வழியாக செல்லும் போது அதிகாலை 1 மணியளவில் ஒரு கும்பல் காரை வழிமறித்து இரும்பு கம்பியால் காரை தாக்கி உள்ளது. காரை வழிமறித்த கும்பல் கையில் கத்தி மற்றும் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அந்த கும்பல் காரில் இருந்த 4 பெண்களையும் இழுத்து சென்று உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய ஒருவரை சுட்டு கொலை செய்து உள்ளனர். பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் 4 பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் காரில் வந்தவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் செல்போன்கள், பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கபட்ட பெண்கள் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . சுட்டுகொலை செய்யப்பட்டவர் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதே புலந்த்சாகர் நெடுஞ்சாலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு காரில் வந்த ஒரு தம்பதிகளில் கணவனை சுட்டு கொலை செய்து விட்டு மனைவி மற்றும் 13 வயது மகளை மரமகும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.