கர்நாடகா முகநூல்
இந்தியா

மருத்துவரை கடத்தி ரூ.6 கோடி பணம் கேட்ட மர்மநபர்கள்; இறுதியில் ரூ.300 கொடுத்து அனுப்பிய சம்பவம்!

சுதாரித்து கொண்ட வேணுகோபால், உடனடியாக அருகில் இருந்த காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்

ஜெனிட்டா ரோஸ்லின்

கர்நாடகாவில் மருத்துவரை கடத்திய மர்ம நபர்கள், ரூ.6 கோடி பணமாக கேட்டநிலையில், இறுதியில் ரூ 300 கொடுத்து டாக்டரை வழியனுப்பிய சம்பவம் நிகழ்ந்து வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலிருந்து சுமார் 312 கிமீ தொலைவில் உள்ளது பெல்லாரி மாவட்டம். இங்கு குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருகிறார் 45 வயதான சுனில். இவர், கடந்த சனிக்கிழமை ( 25 ஜனவரி 2025) காலை, சூரிய நாராயணப்பேட்டையில் வழக்கம்போல நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக சென்றுள்ளார் . அப்போது டாடா இண்டிகோ காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், சுனிலை சுற்றி வழைத்து காரில் கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்தான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவில் பதிவாகியுள்ளது. இதன்பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு, சுனிலின் சகோதரரான வேணுகோபாலுக்கு வாட்ஸ் அப் கால் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர்கள் சுனில் கடத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டிற்கு திரும்பி அனுப்ப வேண்டுமெனில், ரூ. 6 கோடி பணமும், 3 கோடி மதிப்பில் தங்க நகைகளும் வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

சுதாரித்து கொண்ட வேணுகோபால், உடனடியாக அருகில் இருந்த காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். உடனடியாக விரைந்த காவல்துறையினர், கிடைத்த சிசிடிவியின் அடிப்படையில் விசாரணை தொடங்கினர். மேலும், மாவட்ட எல்லையை கடத்தல் காரர்கள் கடக்காமல் இருக்க, அனைத்து எல்லைகளையும் தடுத்ததோடு, வாகன சோதனை என்று பல தீவிர சோதனையை மேற்கொண்டனர்.

இதனால், கலக்கமடைந்த கடத்தல்கார்கள், "அப்பா சாமி, நீயும் வேண்டா.. உன்ற பணமும் வேண்டா” என்பது போல கடத்தப்பட்ட மருத்துவர் சுனிலை இரவு 8 மணி அளவில், பேருந்தில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். இதனால், வெகு தொலைவிற்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் கை செலவிற்காக ரூ. 300 கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளனர் மர்மநபர்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சுனிலின் தம்பி வேணுகோபால் மாவட்ட மது வியாபாரிகள் சங்க தலைவராக இருப்பதல், மதுபான வியாபாரத்தில் ஏதேனும் போட்டியின் காரணமாக இந்த கடத்தல் நடந்ததா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.