உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து சேதமடைந்த 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள எச்டிஎஃப்சி வங்கியின் ஏடிஎம் மையத்தில் இருந்து கிழிந்த நிலையிலும், காந்தியின் புகைப்படம் இல்லாமலும் 500 ரூபாய் நோட்டுகள் வந்தன. பிரதான சாலையில் இருக்கும் இந்த ஏடிஎம் மையத்தில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ரூ. 3500 பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்கு கிழிந்த நிலையில் உள்ள 500 ரூபாய் தாள்கள் வந்துள்ளன. இதைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த மற்றொரு வாடிக்கையாளருக்கு காந்தியின் புகைப்படம் இல்லாத 500 ரூபாய் தாள் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வங்கி நிர்வாகத்திடம் உடனடியாக புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் இதே போன்று தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் ஒன்றில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வந்தது குறிப்பிடத்தக்கது.