இந்தியா

கேரளா: இஸ்ரேல் போரில் உயிரிழந்த இடுக்கி பெண் உடல் நல்லடக்கம்

நிவேதா ஜெகராஜா

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் உயிரிழந்த கேரள பெண் சவுமியாவின் உடல் இன்று இடுக்கி மாவட்டத்திலுள்ள கீரத்தோட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது; இஸ்ரேல் தூதரக ஜெனரல் ஜொனாதன் ஜெட்கா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ஜெருசலேம் நகரில் உள்ள அக் அக்சா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக இஸ்ரேல் படையினர் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக காசா போர் முனையை வசப்படுத்தியுள்ள ஹமாஸ் தீவிரவாத அமைப்பு , இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

.

இதில் இஸ்ரேலின் அஷ்கெலான் நகரில் இருக்கும் குடியிருப்பு ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் அங்கு வசித்த கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம்
கீரத்தோடு பகுதியை சேர்ந்த சவுமியா(31) என்ற பணிப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சவுமியா கடந்த 7 ஆண்டாக இஸ்ரேலில் பணியாற்றி வருகிறார். அவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இரண்டு ஆண்டுக்கு முன் கேரளா வந்து சென்ற சவுமியா, இன்னும் இரண்டு மாதங்களில் கேரளா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் சவுமியாவின் உடல் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு பின் அங்கிருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டு சவுமியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை கீரத்தோடுக்கு கொண்டு வரப்பட்ட சவுமியாவின் உடலுக்கு இஸ்ரேல் தூதரக ஜெனரல் ஜொனாதன் ஜெட்கா நேரில் அஞ்சலி செலுத்தினார். பின் அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன், கேரள ஆளூநர் முகம்மது கான் ஆரிப் சார்பில் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின் இடுக்கி மாதா தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சவும்மியாவின் உடல் பிரத்தனைகளுக்குப்பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.