நிர்மலா சீதாராமன், டெல்லியில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர்
நிர்மலா சீதாராமன், டெல்லியில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர் pt web
இந்தியா

“தமிழ்நாட்டிற்கு 300 மடங்கு அதிகம்”-டெல்லியில் வெடித்த போராட்டமும், நிதியமைச்சர் கொடுத்த விளக்கமும்!

PT WEB

டெல்லியில் நடந்த போராட்டம்

நிதிப்பகிர்வு... இந்த ஒற்றை சொல்தான் தற்போது தென்மாநிலங்களை ஓரணியில் இணைக்கும் மந்திர சொல்... வரியாக செலுத்தும் தொகைக்கும், மத்திய அரசு அளிக்கும் நிதிக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றன தென்மாநில அரசுகள். கர்நாடகாவை தொடர்ந்து கேரளா தலைமையில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், நிதிப்பகிர்வில் மத்திய அரசு காட்டும் பாகுபாடு, ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம் என விமர்சித்துள்ளார்..

மத்திய அரசைக் கண்டித்து வள்ளுவர் கோட்டத்திலும் போராட்டம்

அதேபோல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரம்பட்சம் காட்டும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் வாயிலாக மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், தமிழக ஆளுநருக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். மத்திய அரசு அரசியமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக விமர்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க நினைப்பதாகவும் தெரிவித்தனர்.

“நிதியைக் கேட்டால் மரியாதையைக் கேட்கிறார்கள்” உதயநிதி

நிதிப்பகிர்வு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ரூ.6 லட்சம் கோடி வரி கொடுத்துள்ள போதும், ரூ.1.58 லட்சம் கோடியை மட்டுமே வரிப்பகிர்வாக ஒன்றிய அரசு திருப்பிக் கொடுத்துள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஆனால், ரூ.3.41 லட்சம் கோடி வரி கட்டிய உத்தர பிரதேசத்துக்கு கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி வரிப்பகிர்வை வாரி வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள்.

மாண்புமிகு, மரியாதைக்குரிய, பிரதமர் அவர்களே, ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே இப்போதாவது சொல்லுங்கள் நாங்கள் யாருடைய மரியாதைக்குரிய தகப்பனார் வீட்டு பணத்தை கேட்டோம்? உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது, எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய நிதிப்பகிர்வை தந்திடுங்கள்” என தெரிவித்துள்ளார்.

”9 ஆண்டுகளில் 300 மடங்கு அதிகம்” நிர்மலா சீதாராமன்

இந்நிலையில், தமிழகத்திற்கான வரிப் பகிர்வு, மானியம் மற்றும் வட்டியில்லா கடன் குறித்து மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2023 டிசம்பர் வரையில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட விவரங்களை பட்டியலிட்டார். இக்காலக்கட்டத்தில் இரண்டு லட்சத்து 77ஆயிரத்து 444 கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசு வரிப் பகிர்வாக வழங்கியுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். அதுவே காங்கிரஸ் ஆட்சி செய்த 2004 முதல் 2014 வரை தமிழகத்திற்கான வரிப் பகிர்வு 94,977 கோடியாக இருந்ததாக சுட்டிக்காட்டினார்.

நிர்மலா சீத்தாராமன்

அதேபோல் மானியமாக 2014 முதல் 2023 வரை இரண்டு லட்சத்து 30ஆயிரத்து 893 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது ஒன்பது ஆண்டுகளில் 300 மடங்கு அதிகம் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மூலதன செலவினங்களுக்காக 50 ஆண்டு வட்டியில்லா கடனாக 2021-22ல் 505 கோடி ரூபாயும், 2022-23ல் 3,263 கோடி ரூபாயும், 2023-24 நிதியாண்டில் டிசம்பர் வரை 2,643 கோடி ரூபாயும் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.