இந்தியா

வாராக்கடனில் இருந்து வங்கிகளை மீட்க ரூ.2.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

வாராக்கடனில் இருந்து வங்கிகளை மீட்க ரூ.2.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

webteam

வசூலாகாத கடன் பிரச்னையில் இருந்து வங்கிகளை மீட்கும் வகையில் பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக ரூ.2.11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் கடந்த 2015ஆம் மார்ச் மாதம் வரை ரூ.2.75 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் 2017 ஜூலையில் ரூ.7.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்னும் 2 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் முதலீடு ரூ.2.11 லட்சம் கோடி உயர்த்தப்படும் என்று மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில், மத்திய நிதித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி சேவைத்துறை செயலாளர் ராஜிவ் குமார், பட்ஜெட் ஒதுக்கீடாக ரூ.76 ஆயிரம் கோடியும் மீதமுள்ள, ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் மறுமுதலீட்டுப் பத்திரங்களாகவும் பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்படும் என்று கூறினார். அத்துடன் வங்கிகளின் முதலீடு 4 ஆண்டுகளில் ரூ.70,000 கோடி உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.