நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தில், ஒரு மசோதாவை கூட விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாத வகையிலான மோதல் சூழலே நிலவியது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாந்தனு சென் இடைநீக்கம் செய்யப்பட்ட சர்ச்சை காரணமாக, எதிர்க்கட்சிகளின் மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளதால், அடுத்த வார அலுவல்களும் முடங்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பான ஒரு விவாதத்தை தவிர, வேறு எந்த முக்கிய அலுவலும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த முதல் வாரத்தில் நடைபெறவில்லை. பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தாலும், அதுதொடர்பான அறிக்கையை கூட மத்திய அரசு சுமுகமான சூழலில் தாக்கல் செய்ய இயலவில்லை.
பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய ஐடி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்ய முயன்றபோதுதான் அவரிடமிருந்து அறிக்கையின் நகலை பறித்து கிழித்தெறிந்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சாந்தனு சென்.
அவையின் மாண்பை சிதைக்கும் வகையில் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் வெள்ளிக்கிழமை சாந்தனு சென் இடைநீக்கத்தை அறிவித்தார். மத்திய அமைச்சர் முரளிதரன் தீர்மானத்தை முன்மொழிய, மாநிலங்களவை அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது என அறிவித்த வெங்கையா நாயுடு, அப்போது அவையில் இருந்த சாந்தனு சென் உடனே வெளியேறும்படி உத்தரவிட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினரான சாந்தனு சென் அவையில் இருந்து வெளியேற மறுத்துவிட்டார். இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். இதனால் மாநிலங்களவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பதில் குற்றச்சாட்டாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தங்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும், ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். சாந்தனு சென் அவையை விட்டு வெளியேறாத நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெரிக் ஓ பிரைன் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டார். மாநிலங்களவைத் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் பலமுறை உத்தரவிட்டும், மாநிலங்களவையை விட்டு சாந்தனு சென் வெளியேறாமல் அவைக்குள்ளேயே இருந்ததால், மாநிலங்களவை திங்கட்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.
தினசரி எதிர்கட்சிகளின் முழக்கங்கள் மற்றும் அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளி என்கிற நிலையில், கோவிட் தொடர்பான விவாதம் மட்டுமே மாநிலங்களவையில் முதல் வாரத்தில் நடைபெற்றுள்ளது.
மக்களவையிலும் இதேபோன்ற நிலையே வாரம் முழுவதும் நீடித்தது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல், பேகசஸ் உளவு மென்பொருள் சர்ச்சை, விலைவாசி உயர்வு என பல்வேறு கோரிக்கைகளை எதிர்கட்சியினர் வலியுறுத்தி தொடர் முழக்கங்களில் ஈடுபட்டதால் கேள்வி நேரம் அல்லது ஜீரோ ஹவர் என்று சொல்லப்படும் முக்கிய பிரச்னைகளுக்கு கவனத்தை ஈர்க்கும் அலுவலக நடைபெறவில்லை. பிரதமர் நரேந்திர மோடி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களை அறிமுகப்படுத்த கூட எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த வாரமாவது மசோதாக்கள் மீதான விவாதங்களை நடத்த அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தினமும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி வரும் நிலையில், அடுத்த வாரமும் மோதல் போக்கால் இரு அவைகளும் முடங்கும் சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
- கணபதி சுப்பிரமணியம்