இந்தியா

மசோதாக்கள் நிறைவேற்றம்.... மகிழ்ச்சி தெரிவித்த மோடி

மசோதாக்கள் நிறைவேற்றம்.... மகிழ்ச்சி தெரிவித்த மோடி

webteam

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடரானது ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. நீண்ட கால நடைமுறைகளை மாற்றி பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 9ஆம் தேதி பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 9ஆம் தேதி பட்ஜெட் தொடரின் இரண்டாம் அமர்வு தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் 21 மசோதாக்களும் மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதா 2017-ல் மாநிலங்களவை 5 சட்டத்திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனால் நிதி மசோதாவை பொருத்தவரையில் மாநிலங்களவையில் கொண்டு வரப்படும் திருத்தங்களை ஏற்றுக்கொள்வது மக்களவையின் விருப்பம். பாஜக-விற்கு பெரும்பான்மை இருக்கும் மக்களவையில், இந்த திருத்தங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவது உள்ளிட்ட சடங்களை கொண்ட இந்த மசோதாவை நிதி மசோதாவாக மத்திய அரசு வகைப்படுத்தியது தவறு எனவும் மாநிலங்களவையில் தங்களின் எதிர்ப்பு பயனற்றதாகிவிட்டது எனவும் எதிர் கட்சிகள் கூறின. மேலும், நிதி மசோதா வழியை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவத்தாகவும் எதிர் கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஜிஎஸ்டி மசோதாவை முழுமைப்படுத்தும் வகையில் அதன் துணை மசோதாக்கள் அனைத்தும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.

இது போக மகப்பேறு சலுகைகள் மசோதா, மனநல பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும் இந்த தொடரில் நிறைவேற்றப்பட்டன. பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கியமான மசோதாக்கள் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.