FSSAI ANI
இந்தியா

’எவரெஸ்ட்’ சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து.. FSSAI எடுத்த அதிரடி முடிவு!

எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பேக் செய்யப்பட்ட சீரகத் தூளில் நடத்தப்பட்ட ஆய்வில், அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பைக் கண்காணிக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. எவரெஸ்ட் நிறுவனத்தின் சீரகத் தூளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள் கண்டறியப்பட்டதால், குறிப்பிட்ட தொகுப்பை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பேக் செய்யப்பட்ட சீரகத் தூளில் நடத்தப்பட்ட ஆய்வில், அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

cumin powder

கோவாவில் உள்ள ஒரு வளாகத்தில் இருந்து சீரகத் தூளின் மாதிரி சேகரிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த உணவு ஆய்வாளர், அதில் Azoxystrobin மற்றும் Thiamethoxam ஆகிய இரண்டு பூச்சிக்கொல்லிகளின் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவைவிட அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தார். இதையடுத்து, அந்தச் சீரகத் தூள் மாதிரி உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ‘பாதுகாப்பற்றது’ (UNSAFE) என அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து முறையிட நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர், மாதிரி மேலாய்வுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட உணவு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கும் ஆய்வு செயயப்பட்டதில், இரண்டு பூச்சிக்கொல்லிகளின் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், E080668761 என்ற பேட்ச் எண்ணைக் கொண்ட சீரகத் தூள் தொகுப்பைச் சந்தையில் இருந்து உடனடியாகத் திரும்பப் பெற FSSAI உத்தரவிட்டுள்ளது.

fssai

திரும்பப் பெறப்படும் பொருட்கள் குறித்த முழுமையான ஆவணங்களைப் பராமரிக்கவும், உரிய காலக்கெடுவுக்குள் நடவடிக்கை அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, அது குறித்த அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.