இந்தியா

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடரும் தயக்கம் : காரணம் என்ன?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடரும் தயக்கம் : காரணம் என்ன?

EllusamyKarthik

இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. அதன் மூலம் தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்தும் மாநிலங்களிலும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் இந்த பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் எவ்வளவு பேருக்கு ஊசி போட வேண்டுமென்ற இலக்கு நிர்ணயித்து அரசு இந்த பணியை மேற்கொண்டு வருகிறது. 

இருப்பினும் இந்த பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான முன்கள பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குவதும், முன்வராததும் இதற்கு காரணம் என தெரிகிறது. தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் சிலருக்கு தென்பட்ட பாதகமே அடுத்தவர்கள் தயங்குவதற்கு காரணம் எனவும் தெரிகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர்கள் சிலர் ‘நாங்கள் இப்போதைக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பவில்லை. சில நாட்கள் போகட்டும்’ என உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. 

இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் இரண்டு மருந்துகளில் ஒன்று இன்னும் முழுமையான சோதனையை முடிக்கவில்லை. வரும் நாட்களில் வீரியத்துடன் கூடிய சில மருந்துகளும் சந்தைக்கு வரலாம். அதனால் காத்திருப்பது தான் சிறந்த வழி என இந்த முடிவை எடுத்துள்ளதாக தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.