சஞ்சய் காந்தி, அஜித் பவார் எக்ஸ் தளம்
இந்தியா

தொடரும் சோகம் | சஞ்சய் காந்தி முதல் அஜித் பவார் வரை.. விமான விபத்தில் பலியான பிரபலங்கள்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வருமான அஜித் பவார் பயணித்த விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வருமான அஜித் பவார் பயணித்த விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், விமானம் அல்லது ஹெலிகாப்டர் விபத்துகளில் இறந்த பிரபலங்களின் பட்டியல் குறித்து இங்கு பார்க்கலாம்.

ஹோமி ஜஹாங்கீர் பாபா

ஹோமி ஜஹாங்கீர் பாபா

இந்தியாவின் முன்னோடி அணு இயற்பியலாளரான ஹோமி ஜஹாங்கீர் பாபா, ஜனவரி 24, 1966 அன்று விமான விபத்தில் உயிரிழந்தார். ஜெனீவா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்புப் பிழையின் காரணமாக, அந்த விமானம் சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் உள்ள மான்ட் பிளாங்க் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சஞ்சய் காந்தி

சஞ்சய் காந்தி

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் மகனும் காங்கிரஸ் தலைவருமான சஞ்சய் காந்தி, 1980ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்தார். சப்தர்ஜங் விமான நிலையத்திற்கு அருகில் டெல்லி ஃபிளையிங் கிளப்பிற்குச் சொந்தமான விமானத்தில் வானில் சாகசங்கள் செய்ய முயன்றபோது, ​​விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

மாதவராவ் சிந்தியா

மாதவராவ் சிந்தியா

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மாதவராவ் சிந்தியா, கான்பூரில் நடைபெற்ற ஒரு அரசியல் பேரணியில் கலந்துகொள்ளச் சென்றபோது, ​​2001ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். உ.பி. மணிப்பூரி அருகே மோசமான வானிலை காரணமாக அந்த தனியார் விமானம் விபத்துக்குள்ளானது.

ஜி.எம்.சி.பாலயோகி

ஜி.எம்.சி.பாலயோகி

மக்களவை சபாநாயகரும் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் தலைவருமான ஜி.எம்.சி.பாலயோகி, 2002ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி, விமான விபத்தி உயிரிழந்தார். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில் இருந்து அவரை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் ஹெலிகாப்டர் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கைக்கலூருக்கு அருகே ஒரு குளத்தில் விழுந்து நொறுங்கியது.

சைப்ரியன் சங்மா

மேகாலயாவின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சைப்ரியன் சங்மா, ​​2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி, ஹெலிகாப்டரில் குவஹாத்தியிலிருந்து ஷில்லாங்கிற்குச் சென்று கொண்டிருந்தபோது உயிரிழந்தார். மாநிலத் தலைநகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரபானி ஏரிக்கு அருகே அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

நடிகை செளந்தர்யா

செளந்தர்யா

சௌந்தர்யா என்று பிரபலமாக அறியப்பட்ட புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை கே.எஸ்.சௌம்யா, ஏப்ரல் 17, 2004 அன்று ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். அவர், தனது சகோதரருடன் பெங்களூருவில் இருந்து கரீம்நகருக்குச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

ஓம் பிரகாஷ் ஜிண்டால்

ஓம் பிரகாஷ் ஜிண்டால்

தொழிலதிபரும் ஹரியானா அமைச்சருமான ஓம் பிரகாஷ் ஜிண்டால், 2005ஆம் ஆண்டு ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணித்த ஹெலிகாப்டர் டெல்லியில் இருந்து சண்டிகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் விபத்துக்குள்ளானது.

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி

ஒய்.எஸ்.ஆர்.

ஆந்திரப் பிரதேச முதல்வரும், பிரபலமாக ஒய்.எஸ்.ஆர் என்று அழைக்கப்பட்டவருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடந்த 2009ஆம் ஆண்டு செப். 2ஆம் தேதி நல்லமலா காடு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.

டோர்ஜி காண்டு

டோர்ஜி காண்டு

அருணாச்சலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு கடந்த 2011ஆம் ஆண்டு, ஏப்ரல் 30ஆம் தேதி தவாங் மற்றும் இட்டாநகர் இடையே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

பிபின் ராவத்

பிபின் ராவத்

இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஜெனரல் பிபின் ராவத், கடந்த டிசம்பர் 8, 2021 அன்று தனது மனைவி மற்றும் 11 பேருடன் தமிழ்நாட்டின் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தின்போது உயிரிழந்தார்.

விஜய் ரூபானி

விஜய் ரூபானி

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி கடந்த ஆண்டு நிகழ்ந்த ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விபத்தின்போது உயிரிழந்தார். இவ்விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார்

அஜித் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வருமான அஜித் பவார், இன்று காலை நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.