பத்மாவதி திரைப்படத்தில் நடித்த தீபிகா படுகோனை உயிரோடு எரிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அகில இந்திய ஷத்ரிய மகாசபா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ இந்தி திரைப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இதில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. ராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பத்மாவதி திரைப்படத்தில் நடித்த தீபிகா படுகோனை உயிரோடு எரிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அகில இந்திய ஷத்ரிய மகாசபா என்ற அமைப்பின் இளைஞர் அணித் தலைவர் புவனேஸ்வர் சிங்கின் பேசியிருந்தார். அவரது சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பத்மாவதி திரைப்படத்துக்கு தடை கோரும் வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் டிசம்பர் 1-ம் தேதி படம் வெளியாகாது என இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், உத்தரப் பிரதேசத்தில் திரைப்படத்தை அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார். பத்மாவதி திரைப்படத்தில் ராணி பத்மினியை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.