இந்தியா

“கொரோனா நோயாளிகளுக்கு இலவசம்!” - டெல்லியில் அசத்தும் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை

“கொரோனா நோயாளிகளுக்கு இலவசம்!” - டெல்லியில் அசத்தும் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை

EllusamyKarthik

இந்தியா கொரோனா தொடரின் இரண்டாவது பேரலையில் சிக்கி மூச்சு விட திணறி வரும் சூழலில் டெல்லியில் ஆட்டோக்கள் சில மினி ஆம்பூலன்ஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆட்டோ ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க உதவும் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது. 

இந்த மூன்று சக்கர ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்த ஒவ்வொரு சவாரிக்கு பிறகும் ஆட்டோவை முழுவதுமாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. முக்கியமாக ஆட்டோவை இயக்கும் ஓட்டுநர்கள் தங்களது பாதுக்காப்பிற்காக பாதுகாப்பு கவச உடை அணிந்திருக்கின்றனர். இதில் நோயாளிகள் பயணிக்க எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை. முழுவதும் இலவசம் என்கின்றனர் ஆட்டோவை இயக்கும் ஓட்டுநர்கள். 

சக மனிதன் படும் துயரை கண்டும் காணாமல் நகர முடியாத நல்லுள்ளம் படைத்த சில ஆட்டோ டிரைவர்களும், சில தன்னார்வ அமைப்பு ஒன்றிணைந்து இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி உள்ளன. அதனை ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் தொடங்கி வைத்துள்ளார். ஆட்டோ ஆம்புலன்ஸ் தேவை உள்ள நோயாளிகள் எளிதில் தங்களை தொடர்பு கொள்ளும் வகையில் இரண்டு தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மனிதம் மேலோங்கட்டும்!