இந்தியா

500 கிராம் பிளாஸ்டிக் தந்தால் இலவச உணவு - ஊரை சுத்தப்படுத்தும் இளைஞர்கள்!

500 கிராம் பிளாஸ்டிக் தந்தால் இலவச உணவு - ஊரை சுத்தப்படுத்தும் இளைஞர்கள்!

webteam

மேற்குவங்கத்தில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து தந்தால் இலவச உணவு வழங்கப்படும் என்ற புதுமையான அறிவிப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கவும், அதே நேரத்தில் ஏழை மக்களின் பசியை போக்கவும் இந்த புதுவித திட்டத்தை மாணவ குழுவினர் அறிமுகம் செய்துள்ளனர். மேற்குவங்கத்தின் சிலிகுரியைச் சேர்ந்த ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூட்டம் அண்மையில் நடந்தது. அதில் இடம்பெற்றவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.

நகரத்தில் உள்ள ஆதரவற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து தந்தால் ஒவ்வொரு 500 கிராமமுக்கும்  உணவு வழங்கப்படும் என அறிவித்தனர். இதை கேள்விப்பட்டவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை ஆர்வத்துடன் சேகரித்து பசியாற்றிக்கொண்டனர். சிலிகுரியை பிளாஸ்டிக் இல்லா நகரமாக்க இது முதல் முயற்சி என முன்னாள் மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய மாணவர்கள் குழுவின் தலைவர் சிங் சலூஜா, ''பிளாஸ்டிக் பொருட்கள் கால்வாய்களில் வீசப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் சீராக செல்லாமல் நீர் தேங்கி வெள்ளம் ஏற்படுகிறது. அதனால் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க திட்டமிட்டோம். அதன்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இந்த திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.