இந்தியா

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பெண்களுக்கு இலவச கல்வி - அசத்தும் சமாஜ்வாதி தேர்தல் அறிக்கை

webteam

விவசாயிகளுக்கு 24 மணிநேர இலவச மின்சாரம்; பெண் குழந்தைகளுக்கு மேற்படிப்பு வரை இலவச கல்வி என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது சமாஜ்வாதி கட்சி.

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ளன. இதனால் அங்குள்ள கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. உத்தரபிரதேசத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவினாலும், நேரடிப் போட்டி என்னவோ பாஜகவுக்கும், சமாஜ்வாதிக்கும் இடையேதான் காணப்படுகிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இருப்பது கண்கூடாகவே தெரிகிறது.

மாநிலம் முழுவதும் அவர் மேற்கொள்ளும் சூறாவளி பிரச்சாரங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வேளாண் சட்ட விவகாரத்தில் பாஜகவின் மீது அதிருப்தியில் உள்ள விவசாயிகள், இந்த முறை சமாஜ்வாதி பக்கம் சாய வாய்ப்பிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தமது தேர்தல் அறிக்கையை சமாஜ்வாதி கட்சி நேற்று வெளியிட்டது. ஏற்கனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருந்ததால், சமாஜ்வாதி தேர்தல் அறிக்கை மீது மக்கள் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அதன்படி, தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையில் 1 கோடி வேலைவாய்ப்புகளும், தகவல் தொழில்நுட்பத் துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். மாநிலக் கல்வித் துறையில் அனைத்து காலியிடங்களும் உடனடியாக நிறைவேற்றப்படும். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கு அவர்களின் மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகளின் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கும் மாதந்தோறும் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும். 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் சமாஜ்வாதி தெரிவித்துள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை:

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி லக்னோவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அனைத்து விவசாயிகளுக்கும் பாசனத்திற்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். உருளைகிழங்கு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும், கோதுமை, நெல் ஆகியவை, குறைந்தபட்ச ஆதார விலை மூலம் கொள்முதல் செய்யப்படும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கன்யா சுமங்கலா தொகை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்துள்ளது.

வாரணாசி, மீரட், கோரக்பூர், பரேலி, ஜான்சி மற்றும் பிரயாக்ராஜ் நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கான அரசு பணிகள் இரண்டு மடங்காக உயர்த்தப்படும். தகுதியான மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும். ஹோலி-தீபாவளிக்கு இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆகிய வாக்குறுதிகளையும் அக்கட்சி அறிவித்துள்ளது.

உ.பி.யில் மா அன்னபூர்ணா உணவகம் அமைத்து மலிவு விலையில் உணவு வழங்கப்படும், அயோத்தியில் ராமாயண பல்கலைக்கழகம் நிறுவப்படும், மகரிஷி வால்மீகிக்கு சித்ரகூடத்தில் கலாச்சார மையம், கவிஞர் ரவிதாஸ்க்கு வாரணாசியில் கலாச்சார மையம், நிஷாத்ராஜ் குஹாவிற்கு ரிங்வர்பூரில் கலாச்சார மையம், டாக்டர் பீமாராவ் அம்பேத்கருக்கு கலாச்சார மையம், மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக கலை அகாடமி அமைக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன

லவ் ஜிஹாத் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக மூன்று கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், மாணவர்களுக்கு 2 கோடி கையடக்க கணினி வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளையும் பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.