இந்தியா

தடுப்பூசி போடுங்க தக்காளிய இலவசமா அள்ளுங்க! சத்தீஸ்கரின் பீஜப்பூர் நகராட்சி புது முயற்சி

jagadeesh

சத்தீஸ்கரில் தக்காளியை இலவசமாக தந்து கொரோனா தடுப்பூசி போட மக்களை அழைக்கிறது அம்மாநிலத்தின் பிஜாப்பூர் நகராட்சி நிர்வாகம்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒருபுறம் தொற்றினை கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில்தான் சத்தீஸ்கர் மாநிலத்தின் நகராட்சி நிர்வாகம் ஒன்று புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது. பிஜாப்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தக்காளியை இலவசமாக தந்து கொரோனா தடுப்பூசி போட மக்களை அழைக்கிறது நகராட்சி நிர்வாகம்.

மக்களுக்கு தருவதற்கு போதிய அளவில் தக்காளிகளை வியாபாரிகள் நகராட்சிக்கு தர வேண்டுமெனவும் நகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு கிலோ அளவிலான தக்காளியை மக்களுக்கு தந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போடப்பட்டு வருகிறது.

இது குறித்து நகராட்சி அதிகாரியான புருஷோத்தம் சல்லூர் கூறும்போது "பொது மக்களை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்வேகப்படுத்தவே இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக காய்கறி விற்பனையாளர்களிடம் பேசினோம், அவர்கள் தக்காளியை நகராட்சிக்கு தந்தார்கள்" என்றார்.