இந்தியா

இப்படியெல்லாம் நூதன மோசடியா? : ‘மேஜிக்’ பேனா மூலம் பல லட்சங்களை சுருட்டிய நபர்கள் கைது

EllusamyKarthik

இந்திய தலைநகர் டெல்லியில்  ‘மேஜிக்’ பேனாவை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை கைது செய்துள்ளது டெல்லி காவல் துறை. டெல்லியின் பரீதாபாத் நகரில் தங்களை ஆட்டோமொபைல் துறையின் அதிகாரிகள் என அறிமுகம் செய்துகொண்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கார் வாங்கிய நபர்களை ஏமாற்றியுள்ளது இந்த கும்பல். 

“காரின் உரிமையாளரிடம் காருக்கு நீண்ட கால வாரண்டி கொடுப்பதாகவும், அதற்காக 1100 ரூபாய் மட்டும் உரிமையாளர்கள் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர். அதுவும் கம்பெனி என்பதால் பணத்தை காசோலை மூலம் மட்டுமேபெற முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து காரின் உரிமையாளர்கள் காசோலையை பூர்த்தி செய்யும் போது தங்களிடமுள்ள மேஜிக் பேனாவை கொடுத்து, அதனை பயன்படுத்தி பூர்த்தி செய்ய சொல்லியுள்ளனர். அப்படி செய்தால் சில மணி நேரங்களில் அந்த பேனாவின் மை அழிந்து விடும். பின்னர் அந்த காசோலையில் லட்ச கணக்கில் பணத்தை எழுதி, சம்மந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கிலிருந்து எடுத்துள்ளனர். இந்த விவகாரம் எங்களது கவனத்திற்கு வர விசாரித்ததில் நான்கு பேர் சிக்கியுள்ளனர்” என்கிறார் காவல் துறை அதிகாரி ஒருவர். 

இந்த மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இவர்களை கைது செய்துள்ளனர் போலீசார்.