இந்தியா

விவசாயி தலையில் 4 இன்ச் ’கொம்பு’: ஆபரேஷன் மூலம் நீக்கம்

webteam

விவசாயில் தலையில் வளர்ந்திருந்த 4 இன்ச் கொம்பை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர். 

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ராஹ்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்யாம்லால் யாதவ். விவசாயி. 74 வயதான இவருக்கு கடந்த ஐந்து வருடத்துக்கு முன் தலையில் காயம் ஏற்பட்டது. காயம் ஆறிய பின் அவர் தலையில் சின்ன கட்டி வெளியே தெரிந்தது. அதை முடிவெட்டும்போது, சலூன் கடைகாரர் பிளேடால் வெட்டி விட்டிருக்கிறார். பிறகும் அது வளர்ந்திருக்கிறது. தொடர்ந்து வெட்டி வந்திருக்கிறார். ஆனால், அதன் வளர்ச்சி நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் அது வேகவேமாக வளர, தலையில் திடீர் சுமை!

மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். ஒவ்வொரு மருத்துவமனையிலும் ’இது கஷ்டம், அங்க போய் பாருங்க, இங்க போய் பாருங்க’ என்று அலையவிட்டிருக்கிறார்கள். ஊரில் உள்ளவர்கள், ’இதென்னய்யா கொம்பு, பேய்க்கு இருக்கிற மாதிரி இருக்கு’ என்று கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். தனது கவலையுடன் இவர்களின் கலாய்ப்பையும் தாங்கிக்கொண்டு இருக்கும்போது ’போபாலில் உள்ள சாகர் மருத்துவனைக்கு போய் பாருங்களேன்’ என்று சிலர் அறிவுரை சொல்ல, ’தீர்வு கிடைச்சா போதும், எங்க வேணாலும் போவேன்’ என்று சென்றிருக்கிறார், லால். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அதை நீக்கியிருக்கிறார்கள். ஷ்யாம் லாலுக்கு இப்போதுதான் நிம்மதி!

’’ஆரம்பத்தில் சின்ன வீக்கம் போல்தான் இருந்தது. பின்னர் அது நான்கு இன்ச் அளவுக்கு வளர்ந்தது, பிரச்னையாகிவிட்டது. பல மருத்துவமனைக்குச் சென்றும் பலனில்லை. இங்கு டாக்டர் விஷால், இதை வெற்றிகரமாக நீக்கிவிட்டார்’’ என்கிறார் அவர்.

‘’இது அரிய வகை பிரச்னை. மருத்துவ மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். இதை அறுவை சிகிச்சைக்கான, சர்வதேச இதழில் வெளியிட அனுப்புகிறேன்’ என்கிறார் டாக்டர் விஷால்.