மகா கும்பமேளா எக்ஸ் தளம்
இந்தியா

உ.பி. | திரிவேணி சங்கமத்தில் அதிகளவு பாக்டீரியா.. விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

உத்தரப்பிரதேச திரிவேணி சங்கமத்தில் அதிகளவு பாக்டீரியா இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன

Prakash J

உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.

நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் விழா முடிய சில நாட்களே இருக்கும் நிலையில், பக்தர்கள் எண்ணிக்கை தற்போது 50 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது.

மகா கும்பமேளா

இன்னும் தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மகா கும்பமேளா நிகழ்வு குறித்து ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. திரிவேணி சங்கமத்தில் அதிகளவு பாக்டீரியா இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதன் மற்றும் விலங்குகளின் கழிவுகளில் இருக்கும் ஃபேசல் வகை பாக்டீரியாக்கள் அதிகளவு நீரில் கலந்து இருப்பதாகவும், இந்த நீர், குளிப்பதற்கு தகுதியற்றதாக இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதனை சுட்டிக்காட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தர பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது.

இதற்கிடையே, ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தனது குடும்பத்தினருடன் இன்று (பிப்.18) மகா கும்பமேளாவில் பங்கேற்றார். அவர், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா மற்றும் மகன் அகிரா நந்தன் ஆகியோரும் புனித சடங்கைச் செய்தனர். இவர்களுடன் திரைப்பட தயாரிப்பாளர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸும் சேர்ந்து திரிவேணி சங்கமத்திலும் நீராடினார்.

இந்த நிலையில் மகா கும்பமேளா விழா ஏற்பாடுகள் குறித்து உத்தரப்பிரதேச அரசை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், “மகா கும்பமேளா விழா மரண விழாவாக மாறிவிட்டது. நான் மகா கும்பமேளாவை மதிக்கிறேன். புனிதமான கங்கா மாவை மதிக்கிறேன். கும்பமேளாவில் சரியான திட்டமிடல் இல்லை. எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர்? பணக்காரர்கள், வி.ஐ.பி. கூடாரங்கள் ரூ.1 லட்சம் வரை பெற அமைப்புகள் உள்ளன. ஏழைகளுக்கு, கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் இல்லை. ஒரு கும்பமேளாவில் நெரிசல் ஏற்படுவது பொதுவானது. ஆனால் ஏற்பாடுகளைச் செய்வது முக்கியம். என்ன திட்டமிடல் செய்தீர்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், இவ்விவகாரம் குறித்து முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, “அரசியல் ரீதியான கருத்து குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. நான் அரசியலில் இல்லை. அந்த கருத்தின் தன்மை அரசியல் சார்ந்து உள்ளது. இது அரசியல் பேசுவதற்கான நேரம் அல்ல” என தெரிவித்த அவர், “மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்ட மாநில அரசு நிர்வாகத்தை பாராட்டுகிறேன். மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக தங்கும் வசதி, குளியல், சுகாதாரம் என பல்வேறு விஷயங்களை உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அவரும் தனது குடும்பத்தினருடன் இன்று மகா கும்பமேளாவில் நீராடினார்.