சி.வி. ஆனந்த போஸ்  எக்ஸ் தளம்
இந்தியா

”ராஜினாமாவுக்கான காரணம் ரகசியமானது” - பதவி விலகிய மே.வங்க முன்னாள் ஆளுநர் பேட்டி!

மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை கடந்த மார்ச் 5ஆம் தேதி ராஜினாமா செய்தார்.

Prakash J

மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை கடந்த மார்ச் 5ஆம் தேதி ராஜினாமா செய்தார். தன்னுடைய ராஜினாமாவிற்கான காரணத்தை சரியான தருணத்தில் வெளிப்படுத்துவதாகப் பதவியிலிருந்து விலகிய சி.வி. ஆனந்த போஸ் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், அம்மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை கடந்த மார்ச் 5ஆம் தேதி ராஜினாமா செய்தார். ராஜினாமாவைத் தொடர்ந்து, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், "நான் மூன்றரை ஆண்டுகளாக வங்காள ஆளுநராக இருக்கிறேன்; அது எனக்குப் போதுமானது" எனத் தெரிவித்தார். இருப்பினும், தனது ராஜினாமாவுக்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை. அதே நேரத்தில், இந்த ராஜினாமா வங்காள அரசியல் வட்டாரத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதை, மேற்கு வங்க முதல்வர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையே, தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்தச் சூழலில், தன்னுடைய ராஜினாமாவிற்கான காரணத்தை சரியான தருணத்தில் வெளிப்படுத்துவதாகப் பதவியிலிருந்து விலகிய சி.வி. ஆனந்த போஸ் கூறியுள்ளார்.

தனது சொந்த மாநிலமான கேரளத்திற்கு புறப்படும் முன் கொல்கத்தாவில் போஸ் செய்தியாளர்களை சந்தித்தார். பதவி விலகல் முடிவு சுயமாக எடுத்ததுதான். ராஜினாமாவிற்கான காரணம் சரியான நேரம் வரை ரகசியமாக வைத்திருக்கப்படும். இந்த ஆட்டத்தின் விதிகள், எப்போது அது முடிய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதையும் உள்ளடக்கியது” என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, நாட்டின், 14வது துணைக் குடியரசுத் தலைவராக 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜெகதீப் தன்கர், கடந்த ஆண்டு ஜூலை இறுதியில், உடல்நிலையை காரணம் காட்டி அப்பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெகதீப் தன்கர்

பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்தது, தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். பின்னர், துணைக் குடியரசுத் தலைவராகவும் அவர் பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை ஜெகதீப் தன்கர் பொதுவெளியில் வெளிப்படாததால், காங்கிரஸ் அதுகுறித்து விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.