இந்தியா

ராமர் கோயில் கட்ட ரூ.1,11,11,111 நன்கொடை வழங்கிய உ.பி.-யின் முன்னாள் எம்.எல்.ஏ!

ராமர் கோயில் கட்ட ரூ.1,11,11,111 நன்கொடை வழங்கிய உ.பி.-யின் முன்னாள் எம்.எல்.ஏ!

JustinDurai

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1,11,11,111 (1.11 கோடி) தொகையை உத்தரப் பிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. நன்கொடையாக அளித்தார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அங்கு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ராமர் கோயிலுக்குக் கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

சுமார் 161 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த ராமர் கோயில், மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் கட்டப்படவுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் ராமர் கோயிலை கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் நிதி திரட்டி ராமர் கோயில் கட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அரசிடம் இருந்தோ, வெளிநாடுகளில் இருந்தோ, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்தோ நிதி பெறாமல், நாட்டு மக்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக மக்களிடம் இருந்து ரூ.10, ரூ.100, ரூ.1,000 என்ற அளவிலும் அவரவர் விருப்பத்துக்கேற்பவும் நிதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயில் கட்டுமானத்திற்குத் தேவையான நிதியைச் சேகரிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ஸ்ரீ ராம் ஜன்மபூமி அறக்கட்டளை சார்பில், அதன் இணைத் தலைவர் கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, அவரிடமிருந்து 5 லட்சத்து 100 ரூபாயை நன்கொடையாக பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் தேஸ்கான் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர பகதூர் சிங், கோயில் கட்டுமானத்திற்கான தனது பங்களிப்பாக ஒரு கோடியே 11 லட்சத்து, 11 ஆயிரத்து 111 ரூபாய்க்கான (1,11,11,111)  காசோலையை வழங்கினார்.

மேலும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ,குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் மாநில ஆளுநர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நன்கொடை அளித்துள்ளனர்.