ஒவ்வொரு மாதமும் நான் படிப்பதற்காகக் காத்திருக்கும் ஒரு கட்டுரை, நாட்டின் பொருளாதார நிலை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வெளியிடும் அறிக்கையாகும். தற்காப்புக்காக அதில் தவறாமல் இடம்பெறும் ஒரு வாசகம் எனக்கு வேடிக்கையாகவே இருக்கிறது. “ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பூனம் குப்தாவின் வழிகாட்டல்களுக்காகவும், ஆலோசனைக் கருத்துகளுக்காகவும் நன்றி… இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அவற்றைத் தயாரித்தவர்களுடைய தனிப்பட்ட கருத்தியல்கள், அவை இந்திய ரிசர்வ் வங்கியின் கருத்துகள் அல்ல…” இந்த வாசகம் இப்படிக் கூறினாலும் இதில் இடம் பெறும் ஒரு வார்த்தைகூட ரிசர்வ் வங்கியின் கவர்னருடைய பார்வையிலிருந்தும் ஒப்புதலில் இருந்தும் தப்ப முடியாது என்பது ஊர் அறிந்த ரகசியம். துணை கவர்னர்கள் தயாரிக்கும் ஆய்வுக் கட்டுரைகள், உரைகள் கூட கவர்னரின் ஒப்புதலுக்குப் பிறகே வெளியாகும்.
அறிக்கையில் இடம்பெறும் இந்த முன்னெச்சரிக்கை வாசகத்தை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் கட்டுரையைப் படிப்பவர்கள் அதில் உள்ளவற்றை தங்களுடைய விமர்சனக் கட்டுரைகளிலும் உரைகளிலும் அப்படியே எடுத்தாள்கின்றனர். இந்தக் கட்டுரையில் ஒரேயொரு வார்த்தை அடிக்கடி இடம் பெறுகிறது: ‘நிச்சயமற்ற நிலை’. ஒன்றிய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த பிறகும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, ஊதிய விகிதம் – சம்பளம், முதலீடு, வருமானம், வரிகள், அன்னிய வர்த்தகம் ஆகியவற்றில் நிச்சயமற்ற நிலையே தொடர்கிறது. இந்த ‘நிச்சயமற்ற தன்மை’ பொருளாதாரம் அல்லாத பிற துறைகளிலும் காணப்படுகிறது. பொதுத் தேர்வுகள், வாக்காளர் பட்டியல், தேர்தல்கள், சட்டங்கள் – அவற்றை அமல்படுத்தல், வெளியுறவுக் கொள்கை, அண்டை நாடுகளுக்கான கொள்கை போன்றவற்றிலும் நிச்சயமற்ற நிலையே நிலவுகிறது. இந்த அரசின் தன்மை எப்படிப்பட்டது என்று கேட்டால், எல்லாவற்றிலும் ‘நிச்சயமற்ற நிலை’ என்றே சொல்லிவிடலாம்.
இப்போது நிலவும் பொருளாதார நிலை குறித்து எப்போது கேட்டாலும், ‘நம்முடைய பொருளாதாரம் எதையும் தாங்கி மீண்டுவிடும் அளவுக்கு நெகிழ்ச்சித்திறன் உள்ளது’ என்பதே பதிலாக இருக்கிறது. அரசாங்கத்தைப் போலவே ரிசர்வ் வங்கியும் உறுதியற்ற நாணல்களையே பெருமரமாக நம்பி பற்றிக் கொண்டிருக்கிறது. இப்போது கடைசியாக அதற்குக் கிடைத்திருக்கும் ஒரு பற்றுக்கோடு, பொது சரக்கு சேவை வரி - ஜிஎஸ்டி சீர்திருத்தம் (அதாவது விகிதங்களில் செய்துள்ள மாற்றம்). பெரும்பாலான பண்டங்கள் மீதான கடுமையான வரியைக் குறைத்திருப்பதையே ‘மிகப் பெரிய சீர்திருத்தம்’ என்கிறது ரிசர்வ் வங்கி. மிகவும் கடுமையாகவும், பல அடுக்குகளிலும் விதிக்கப்பட்ட பொது சரக்கு – சேவை வரியைக் குறைத்தும் சீரமைத்தும் அறிவித்தது, செய்த பாவத்திலிருந்து எந்த வகையில் அரசைக் காப்பாற்றும்? இது எந்த விதத்தில் சீர்திருத்தமாக கருதப்படும்? ஜிஎஸ்டி சட்டங்களை உருவாக்கிய விதமே தவறு, வரிக் கட்டமைப்பும் தவறு, அதை அமல்படுத்துவதற்காக உருவாக்கிய விதிகளும் – கட்டுப்பாடுகளும் தவறு, வரி விகிதங்களும் தவறு, வரிச் சட்டங்களை அமல்படுத்திய விதமும் தவறு. இவ்வாறு தவறுகள் மலிந்த பல அடுக்கு உயர் வரி விகிதத்தைத் திருத்திக்கொண்டிருப்பது - என்னைப் பொருத்தவரை - புதிய வழிகாட்டலுக்கான சீர்திருத்தமே அல்ல.
ஆனால் ரிசர்வ் வங்கியின் கட்டுரையோ வரி விகித சீர்திருத்தத்துக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலைமை பொங்கிப் பெருகிவிட்டதைப் போல எழுதப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்களுக்குப் பிறகு நுகர்வோரின் கைகளில் 2 லட்சம் கோடி ரூபாய்கள் மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 2025-26இல் ரூ.3,57,00,000 என்ற மதிப்பீட்டின்படி நுகர்வோரின் கையில் மிஞ்சும் இந்தக் கூடுதல் தொகை வெறும் 0.56% மட்டும்தான். இந்தியாவின் சில்லறை வாணிப வருடாந்திர மொத்த மதிப்பு ரூ.82,00,000 கோடியில் இந்த கூடுதல் உபரி வெறும் 2.4% மட்டுமே. வரிக்குறைப்பால் நுகர்வோர் கூடுதலாக செலவு செய்வதால் நுகர்வு அதிகரிக்கும் என்பது உண்மையே என்றாலும் அதன் விளைவு பொருளாதாரத்தைப் பெருமளவு ஊக்குவித்துவிடும் என்பவையெல்லாம் மிகையான வார்த்தைகளே.
வரிவிகிதக் குறைப்பால் நுகர்வோரிடம் எஞ்சும் ரூ.2 லட்சம் கோடி முழுக்க முழுக்க நுகர்வுச் செலவுகளுக்கே சென்றுவிடும் என்பதும் உண்மையல்ல. அரசின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படியே, பொருளாதாரச் சூழல் காரணமாக இந்தியக் குடும்பங்களின் மொத்த கடன் சுமை ஜிடிபியில் 40% அளவுக்கு இருக்கிறது, குடும்பங்களின் மொத்த சேமிப்பு ஜிடிபியில் 18.1% அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. எனவே நுகர்வோரிடம் எஞ்சும் தொகையில் ஒரு பகுதி அவசியக் கடனை அடைக்கவும், எதிர்கால அவசரத் தேவைகளுக்காக சிறிதளவு சேமித்து வைக்கவும் பயன்படுத்தப்படும். நுகர்வுச் செலவு அதிகரிக்கும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அது நுகர்வு- உற்பத்தி-முதலீட்டு சங்கிலியை வலுப்படுத்தி பெரிதாக்கிவிடுமா? அரசாங்க பொருளாதார அறிஞர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருமே, அப்படி பொருளாதாரம் மீட்சி அடைந்து பெரும்பாய்ச்சல் காண்பது சாத்தியமே இல்லை என்றே கருதுகின்றனர்.
நிதியமைச்சகமும் இந்திய ரிசர்வ் வங்கியும் அதே வேத புத்தகத்திலிருந்தே சங்கீதம் படிக்கின்றன. நிதியமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவுக்கு 2025 ஜூன் 19இல் அளித்த மூன்று காட்சி விளக்கங்களுக்கான தலைப்புகள் பின்வருமாறு அமைந்தன:
உலகின் பொருளாதார நிலைமை நிச்சயமற்ற தன்மையுடன் வெவ்வேறு உயர் அளவில் இருக்கிறது.
உலக அளவில் வர்த்தகமும் - முதலீடுகளும் குறைந்து, ஊர்ந்து செல்லும் அளவிலேயே இருக்கிறது.
இந்தப் பின்னணியில், இந்தியப் பொருளாதாரச் செயல்பாடு வீரியமாகவே இருக்கிறது.
கடுமையான பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த நாட்டின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் ஏன் ஆர்வமாக இல்லை என்று தெரியவில்லை. ‘வாழ்வதை எளிதாக்குங்கள் – தொழில், வர்த்தகம் செய்வதில் சிக்கல்களை நீக்குங்கள்’ என்று பிரதமர் எவ்வளவுதான் வலியுறுத்தினாலும் கனமான சீர்திருத்தங்களை யாரும் செய்வதாகத் தெரியவில்லை.
இந்தியப் பொருளாதாரச் செயல்பாடுகள் வெளிப்படையாகவும் பிற நாடுகளுடன் போட்டி போடும் திறனுடனும் இருக்க வேண்டும். ‘ஒரு கதவு திறந்தால் – ஒரு ஜன்னல் மூடப்படுவதே’ நம்முடைய அனுபவமாக இருக்கிறது. போட்டி போடும் துடிப்புமிக்க பொருளாதார நாடாக மாற வேண்டும் என்றால் இரு தரப்பாகவும் - பல தரப்பாகவும் தொழில்- வர்த்தக உறவு முறைகளை நாம் கைக்கொள்ள வேண்டும். மைக்ரோ சிப்புகளிலிருந்து – கப்பல்கள் வரையில் எல்லாவற்றையும் நம் நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பு, நம்மை போட்டியிடும் செயல்திறமுள்ள நாடாக மாற்றிவிடாது. நம் நாட்டில் குறைந்த செலவில் தயாரிக்க முடிந்த பொருள்களின் உற்பத்தியிலும் சேவைத்துறையிலும் மட்டுமே நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நம்முடைய இந்த அணுகுமுறையை தெற்காசிய நாடுகளுடனும் ஆசியான் அமைப்பில் உள்ள நாடுகளுடனும் தொடங்கலாம். உலகிலேயே அதிகம் ஒருங்கிணைக்கப்படாத பன்னாட்டு அமைப்பு ‘சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு). சர்வதேச அளவிலான வர்த்தக மதிப்பில் வெறும் 5% முதல் 7% வரையில்தான் ‘சார்க்’ நாடுகள் தங்களுக்குள் செய்துகொள்கின்றன. ‘சார்க்’ அமைப்பில் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம் 8%-க்கும் குறைவு. ஆசியான் நாடுகளுடன் அந்த மதிப்பு வெறும் 11%.
அரசு எல்லாத் துறைகளிலும் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதே அடுத்த சீர்திருத்தமாக இருக்க வேண்டும். சட்டங்களை அமல்படுத்த வேண்டிய துறைகளிலிருந்து வரி வசூல் நிர்வாக அதிகாரிகள் வரையில் அனைவருமே புதிது புதிதாக விதிகளையும் கட்டுப்பாடுகளையும் உருவாக்குவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். அமைச்சர்களிடம் அவரவர் துறை சார்ந்த சட்ட மசோதாக்களைப் பற்றி மட்டும் விளக்குகிறார்களே தவிர அவற்றை அமல்படுத்த எத்தனை விதிகள் – எவ்வளவு கட்டுப்பாடுகள், நிரப்ப வேண்டிய படிவங்கள், அறிவித்தல்கள், வழிகாட்டல்கள் ஆகியவற்றின் விவரங்களைச் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்கள். அதனால்தான் சரக்கு – சேவைகளுக்கு நாடு முழுவதும் எளிமையாகவும் சீர்மையாகவும் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டிய பொது சரக்கு சேவை வரி, ‘கப்பர் சிங் வரி’ என்று கேலி பேசும் அளவுக்குக் கடுமையாக மாறியது. அரசின் நிர்வாகத்தில் நிலவிய அர்த்தற்ற கட்டுப்பாடுகளும் விதிகளும் 1991-96 ஆட்சிக்காலத்தில் ‘முதல் அலையில்’ நீக்கப்பட்டு வளர்ச்சி ஏற்பட்ட பிறகு இப்போது படிப்படியாக அவை மீண்டும் புகுந்துவிட்டன. இப்போது மேலும் மேலும் புதிய கட்டுப்பாடுகளும் விதிகளும் அன்றாடம் சேர்க்கப்படுகின்றன. இப்படி கணக்கின்றி வளர்ந்துவிட்ட விதிகளையும் கட்டுப்பாடுகளையும் எல்லாத் துறைகளிலும் வெட்டிக் கழிப்பதற்காக அதிக வீச்சரிவாள் அதிகாரமுள்ள ஆணையத்தை உருவாக்குவதே அரசின் அடுத்த பெரிய சீர்திருத்தமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரே நடவடிக்கைதான், பிரதமர் கூறும், “வாழ்வதை எளிதாக்குங்கள் – தொழில், வர்த்தகம் செய்வதில் சிக்கல்களை நீக்குங்கள்” என்ற கொள்கையை நிறைவேற்ற உதவும். அப்படிச் செய்தால் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் என்பதைத் துணிச்சலோடு சொல்கிறேன்.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் என்பது செய்த பாவத்துக்குப் பரிகாரம், அதைவிட அதில் கொண்டாட ஏதுமில்லை. அதற்காக விழாக்களை நடத்த வேண்டியதில்லை. நமது பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு இது சரியான தீர்வும் அல்ல.