‘பிரதம மந்திரி (மோடி) மிகவும் இனிமையான மனிதர் – முழுமையான காரியவாதி’ என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக இருந்தபோது 2024 அக்டோபரில் பேட்டியளித்தார் டொனால்டு டிரம்ப். ‘வளர்ச்சியடைந்த பாரதம் தொடர்பான எங்களுடைய தொலைநோக்குப் பார்வை – இந்தியாவை மீண்டும் உன்னத நிலைக்கு (மிகா-MIGA) கொண்டு வருவது; அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பணியாற்றும்போது, மகாவும் (MAGA) மிகாவும் (MIGA) சேர்ந்து மெகா (MEGA) – வளர்ச்சிக்கான கூட்டாண்மையாக வலுப்பெறும்’ என்று அமெரிக்க அதிபராக இந்தியா வந்திருந்தபோது 2025 பிப்ரவரியில் அவரே கூறினார். இரு தலைவர்களும், பள்ளிக்கூட சிறுவர்களைப் போல தங்களுடைய நெருக்கமான நட்பை அப்போது வெளிப்படுத்தினார்கள்.
அந்தத் தோழமையும், இணக்கமான நட்பும் இப்போது எங்கே மறைந்தன?
பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் 2025 மே 7ஆம் தேதிக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்று அறிகிறேன்; அமெரிக்க குடியரசு துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மட்டுமே மே 9ஆம் நாள் இரவு மோடியுடன் பேசினார்கள், (பாகிஸ்தானுக்கு எதிரான) தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்தினார்கள். ‘ட்ரூத் சோஷியல்’ என்ற தன்னுடைய இணையதளத்தில், இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக சில பதிவுகளை வெளியிட்டார் டிரம்ப். “அமெரிக்கா தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட மத்தியஸ்த பேச்சுகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாகவும் முழுமையாகவும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். மே 10 மாலை 5.25 மணிக்கு வெளியான அந்த அறிவிப்பு, உண்மை நிலவரம் என்ன என்பதை இந்தியர்கள் அறிந்துகொள்ளும் வகையில், ‘கடுமையான அதிர்வலைகளை’ ஏற்படுத்தியது.
அந்த விவகாரம் தொடர்பாக அதிபர் டிரம்ப், பொய் எதையும் சொல்லி மழுப்பவில்லை; போர் நிறுத்தம் மாலை 3.35 மணிக்கு ஒப்புக்கொள்ளப்பட்டு மே 10, 2025 இரவு 5 மணி முதல் அமலுக்கு வந்தது. முகத்தில் புன்சிரிப்பு கூட இல்லாமல், இந்திய வெளியுறவுத்துறை செயலர் அதை மாலை 6 மணிக்கு உறுதிப்படுத்தினார். இதில் அமெரிக்கா எப்படி மத்தியஸ்தம் செய்தது (கையைப்பிடித்து முறுக்காமல்), ஏன் மத்தியஸ்தம் செய்தது என்பதை ஆழமாக ஆராய்வது அவசியம் என்று கருதுகிறேன். இதற்கு நியாயமான பல காரணங்கள் இருக்கின்றன:
Ø மிகவும் ‘அச்சுறுத்தல் தரக்கூடிய உளவுத் தகவலை’ அமெரிக்க குடியரசின் துணை அதிபர் வான்ஸ், மே 9 மாலையில் பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். அது, ‘இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்’ என்று பாகிஸ்தான் விடுத்த மிரட்டலாக இருக்கக்கூடும் அல்லது இந்த மோதலில், ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா மிகப் பெரிய அளவில் இறங்கும்’ என்ற தகவலாகவும் இருக்கலாம். ‘அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்’ என்று பிரதமர் மோடியும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அறிவித்தனர்: அப்படி ஒரு மிரட்டல் இல்லையென்றால் இருவரும் ஏன் அதைப்பற்றிப் பேச வேண்டும்?
Ø இந்த மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனம் செயல்பட்டதற்குப் பல ஆதாரங்கள் தெளிவாக உள்ளன; தனது சொந்தத் தயாரிப்பான போர் விமானத்தையும் (ஜே-10 ரகம்), ஏவுகணைகளையும் (பிஎல்-15) பாகிஸ்தான் பயன்படுத்த அது அனுமதித்தது. சீனத்தின் தொழில்நுட்பத் தகவல்களோ, பாகிஸ்தானின் ராணுவ கேந்திரத் தலைமையிடங்களில் சீன அதிகாரிகளோ இல்லாமல் இப்படிப்பட்ட பங்களிப்புக்கு வாய்ப்பே கிடையாது. (இந்தத் தாக்குதல்களால் சேதம் ஏற்படாமல் தடுத்ததுடன், அவற்றை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா).
Ø சீனத்தின் ‘மக்கள் விடுதலை சேனை’ (பிஎல்ஏ) படைப்பிரிவின் மேற்கு, தெற்கு போர் அரங்குகளில் உள்ள மைய ராணுவ ஆணையத் துணைத்தளபதி அலுவலகத் தலைமையகங்களில், கர்னல் பதவி அந்தஸ்தில் உள்ள பாகிஸ்தான் தரைப்படை அதிகாரிகள் (ஒத்துழைப்பு-ஒருங்கிணைப்புக்காக) நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல்களை ‘இந்தியா.காம்’, ‘டிஃபன்ஸ்எக்ஸ்ப்.காம்’ என்ற இரு இணையதளங்கள் வெளியிட்டுள்ளன. எப்படி தாக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு சீனம் வழிகாட்டியிருப்பது வெளிப்படை.
Ø இந்தியாவின் ‘எஸ்-400’ வான் தாக்குதல் தற்காப்பு அரணைத் தகர்க்க, சீனத் தயாரிப்பில் உருவான – ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ‘போர்முறையில் புதிய சகாப்தம்’ என்று சீனத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ‘சின்ஹுவா’ அதை வர்ணித்துள்ளது. (பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக கூறிய ஆதம்பூர் விமானப்படை தளம், வான் தாக்குதல் பாதுகாப்பு அரண் காரணமாக எந்தவித சேதத்துக்கும் ஆளாகாமல் அழிவில்லாமல் இருந்தது).
அந்த ‘நான்கு நாள்கள் போரை’ உற்று கவனியுங்கள், அது பாதையையே திசை திருப்பிவிட்டது; மே 7-இல் இந்தியா நவீன கணினி வழிகாட்டல் உதவியுடனான தாக்குதல் உத்தியைக் கையாண்டது. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த எந்தவொரு படை வீரரும் நில எல்லையையும் கடக்கவில்லை, கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டையும் தாண்டவில்லை. எதிரியின் வான் எல்லைக்குள் இந்தியப் போர் விமானம் ஒன்று கூட நுழையவில்லை. இந்தத் தாக்குதலில் பயன்பட்டவை அனைத்தும் ஏவுகணைகளும் ஆயுதங்களை எடுத்துச் சென்ற டிரோன்களும்தான். தாக்குதலை முதலில் தொடங்கியவர்கள் என்ற வகையில் இந்தியாவால் மே 7 முதல் மே 9 வரையில் பாகிஸ்தானுக்கு கடுமையான சேதங்களை விளைவிக்க முடிந்தது. வெற்றியின் உச்ச கட்டத்துக்கு இந்தியா சென்றபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர நிர்பந்தித்தார். ‘மிகவும் இனிமையான மனிதருடனான’ நட்பை உதறித்தள்ளிவிட்டு, ‘உடனடியாக தாக்குதலை நிறுத்துங்கள்’ என்று அவருக்குக் கடுமையான நெருக்குதலை அளித்தார். சவூதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் சென்றபோது, தன்னுடைய மத்தியஸ்த முயற்சியால்தான் இந்தியா – பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது என்றும், ‘மோதல் தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் வர்த்தக உறவை முறித்துக் கொள்வேன்’ என்று எச்சரித்ததாகவும் – இது உண்மையில்லை என்று இந்திய அரசுத் தரப்பில் மறுத்தாலும் – பேட்டிகளில் தெரிவித்தார் டிரம்ப்.
டிரம்ப் இப்படித் தலையிடக் காரணம் அவருடைய குடும்பத்தின் தனிப்பட்ட வணிக நலன்கள்தான் என்பது நாள்கள் செல்லச் செல்லத் தெளிவாகிவிட்டது. டிரம்ப் குடும்பத்தாரின் ‘கிரிப்டோ கரன்சி’ நிறுவனமான ‘வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல்’ (டபிள்யுஎல்எஃப்) - பாகிஸ்தான் பிரதமர், ராணுவத் தலைமை தளபதி ஆகியோருடன் பேசிய பிறகு - பாகிஸ்தான் கிரிப்டோ கவுன்சிலுடன் ஏப்ரல் 26-ல் செய்துகொண்ட உடன்பாடுதான் டிரம்பின் தலையீட்டுக்கு முக்கியக் காரணம். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு நான்கு நாள்கள் கழித்து இந்த உடன்பாடு கையெழுத்தாகியிருக்கிறது! மோதல் தொடங்கியபோது, நமக்கென்ன என்று ஒதுங்கியிருந்த டிரம்ப் அது உச்சமடைந்தபோது, குடும்ப நிறுவன நலனுக்காக இதில் அக்கறை காட்டினார். போரை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கத் தரப்பு மே 7 முதல் பரபரத்தது, இறுதியில் டிரம்ப் குறிப்பிட்டபடி போர் நிறுத்தமும் ஏற்பட்டது.
மோடிக்கும் டிரம்புக்கும் இடையில் நட்புணர்வு இருந்தும், ‘சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியவர்கள்’ என்று அடையாளம் காணப்பட்ட இந்தியர்கள் கை–கால்களில் விலங்கிடப்பட்டு விமானங்களில் ஏற்றி வலுக்கட்டாயமாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்; இந்தியாவிடமிருந்து இதைக் கண்டித்து ஒரு வார்த்தை வரவில்லை. இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது, மிக அதிகமாக இறக்குமதி வரி விதிக்கப்பட்டது; இந்தியாவிடமிருந்து ஒரு கண்டன வார்த்தையும் வரவில்லை.
பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) கடனுதவி பாகிஸ்தானுக்குக் கிடைப்பதற்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது; இந்தியாவிடமிருந்து ஒரு கண்டன வார்த்தை இல்லை. (பாலஸ்தீனத்தை ஆதரித்த இந்திய மாணவர்கள் உள்பட) பல நாடுகளின் மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பயில தடை விதிக்கப்பட்டது, இந்தியாவிடமிருந்து ஒரு கண்டன வார்த்தை எழவில்லை. இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ‘விசா’ அனுமதி அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும் ஆபத்து நேரிட்டிருக்கிறது - ஒரு கண்டன வார்த்தை இல்லை. இந்திய மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு வாய்ப்பளிக்கும் நேர்காணல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன - ஒரு கண்டன வார்த்தை இல்லை. இப்படித்தான் இவ்விரு தலைவர்களிடையேயான நட்புறவு, ‘மோசமான நிலையில்’ இருக்கிறது.
இந்தியப் பிரதமர் (மோடி), இப்போது ‘அமெரிக்க அதிபருடன்’ தொடர்பில் இல்லை. பல கோடி டாலர்கள் மதிப்புள்ள ‘டபிள்யுஎல்எஃப்’ (WLF) என்ற ‘வணிக நிறுவனத்தின் குடும்பத் தலைவருடன்தான்’ (டிரம்ப்) தொடர்பில் இருக்கிறார்; அந்த நிறுவனம்தான் பாகிஸ்தானுடன் மிகப் பெரிய வர்த்தக உடன்படிக்கையில் சமீபத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. தனது படை, பலம், அதிபர் பதவிக்குரிய அதிகாரம் ஆகியவற்றை சொந்த நலனுக்குப் பயன்படுத்த தயங்காத ‘மிகப் பெரிய தொழிலதிபருடன்தான்’ அவர் தொடர்பில் இருக்கிறார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு இந்தியாவில் கிடைத்த அமோக ஆதரவுக்குப் பிறகும், வீர தீரம் பொங்க நாட்டு மக்களுக்கிடையே பேசிய வசனங்களுக்குப் பின்பும் - டிரம்பின் நடவடிக்கையாலும் மிரட்டலாலும் நிலைகுலைந்துவிட்டார் மோடி. பாகிஸ்தானை இனியும் கிள்ளுக்கீரையாக கருதிவிட முடியாது. இப்போது அதற்கு சீனத்தின் ராணுவ ஆதரவும் அமெரிக்காவின் ராஜதந்திர ஆதரவும் சேர்ந்திருக்கிறது. ராணுவ ரீதியாக வலிமையான உத்தியை வகுக்க இந்தியா மீண்டும் புதிதாக சிந்தித்தாக வேண்டும்; அமெரிக்கா தொடர்பான தனது கொள்கையை மாற்றிக் கொள்ளவும் உத்தி வகுத்தாக வேண்டும்.